ராகம கழகத்தை வீழ்த்தி சம்பியனானது தமிழ் யூனியன்

156
SLC

இலங்கையில் உள்ள பிரதான கழகங்களுக்கிடையில் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தை 36 ஓட்டங்களால் வீழ்த்தி தமிழ் யூனியன் கழகம் சம்பியனாகத் தெரிவாகியது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2021/22 பருவகாலத்துக்கான பிரதான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் கடந்த சில வாரங்கள் நடைபெற்றன.

இதில் இன்று கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராகம கிரிக்கெட் கழகம் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் என்பன பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராகம கிரிக்கெட் கழகம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தமிழ் யூனியன் கழகம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் சந்தூஷ் குணதிலக்க 47 ஓட்டங்களையும், சுபுன் காவிந்த 42 ஓட்டங்களையும், அணித்தலைவர் சதீர சமரவிக்ரம 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

ராகம அணியின் பந்துவீச்சில் இஷான் ஜயரட்ன, நிபுன் மாலிங்க, கல்ஹார சேனாரத்ன மற்றும் ஜானக சம்பத் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இதனையடுத்து 182 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராகம கிரிக்கெட் வீர்ரகள், எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் சுமிந்த பெர்னாண்டோ 38 ஓட்டங்களையும், அணித்தலைவர் இஷான் ஜயரட்ன 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். தமிழ் யூனியன் அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில் 36 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம், 2021/22 பருவகாலத்துக்கான பிரதான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரின் சம்பியனாகத் தெரிவாகியது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கழகம் – 181/9 (50) – சந்தூஷ் குணதிலக்க 47, சுபுன் காவிந்த 42, சதீர சமரவிக்ரம 34, கல்ஹார சேனாரத்ன 2/22, இஷான் ஜயரட்ன 2/27, ஜானக சம்பத் 2/29, நிபுன் மாலிங்க 2/36

ராகம கிரிக்கெட் கழகம் – 145/10 (32.4) – சுமிந்த பெர்னாண்டோ 38, இஷான் ஜயரட்ன 26, நிஷான் மதுஷங்க 23, ஜெப்ரி வெண்டர்சே 5/27, திலும் சுதீர 2/28

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 36 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<