தமிழ் யூனியன், ராகம கழகங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி

Major Club Limited Over Tournament 2021/22

136

இலங்கையின் பிரதான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தமிழ் யூனியன் மற்றும் ராகம கிரிக்கெட் கழகங்கள் தகுதிபெற்றன.

இதில் ராகம கிரிக்கெட் கழகம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

2021/22 பருவகாலத்துக்கான பிரதான கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று (28) நடைபெற்றன. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த இரண்டு போட்டிகளும் இடைநடுவில் கைவிடப்பட்டதுடன், போட்டியின் எஞ்சிய பகுதி ஆட்டத்தை மேலதிக நாளான இன்றைய தினம் (29) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதில் மக்கொன – சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தமிழ் யூனியன் கழகத்துக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இராணுவ கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் சதீர சமரவிக்ரம அரைச்சதத்தைப் பெற்றுக்கொள்ள, நவோத் பரனவிதான ஒரு ஓட்டத்தால் அரைச்சதத்தை தவறவிட்டு 49 ஓட்டங்களையும், சந்தூஷ் குணதிலக்க 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இராணுவ கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சு சார்பில் ஹேஷான் ஹெட்டியாரச்சி 3 விக்கெட்டுக்களையும், சீக்குகே பிரசன்ன மற்றும் சுமிந்த லக்ஷான் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதனையடுத்து தொடர்ந்து பெய்த மழை காரணமாக இராணுவ கிரிக்கெட் கழகத்தால் தமது இன்னிங்ஸை ஆரம்பிக்க முடியாமல் போனதுடன், போட்டியின் எஞ்சிய ஆட்டத்தை இன்று (29) மீண்டும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இன்று பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியானது 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன், இராணுவ கிரிக்கெட் கழகத்துக்கு 227 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

எனினும், தமிழ் யூனியன் கழகத்தின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறிய இராணுவ அணியினர், 32.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் அசேல குணரட்ன 40 ஓட்டங்களையும், சீக்குகே பிரசன்ன 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, தமிழ் யூனியன் கழகத்தின் பந்துவீச்சில் பிரமோத் மதுஷான் மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீதமும், ஷிரான் பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, டக்வர்த் லூயிஸ் முறைப்படி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம்

தொபகொட இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ராகம கிரிக்கெட் கழகம் மற்றும் NCC கழகம் என்பன பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற NCC கழகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராகம கிரிக்கெட் அணி, மழை காரணமாக போட்டி நிறுத்தப்படும் போது 31 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை எடுத்து தடுமாறியிருந்து.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க 41 ஓட்டங்களை அதிபட்சமாக எடுக்க, பந்துவீச்சில் சவிந்து கொழம்பகே 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இந்த நிலையில், நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக இன்று மாலை வரை மைதானத்தில் ஈரலிப்புத் தன்மை காணப்பட்டமையால் போட்டியின் எஞ்சிய பகுதி ஆட்டத்தை நடத்த முடியாமல் போனது.

இதனால் போட்டியை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், B பிரிவில் இடம்பெற்ற இவ்விரு அணிகளில் ராகம கிரிக்கெட் கழகம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட காரணத்தால் இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறியது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 242/10 (50) – சதீர சமரவிக்ரம 50, நவோத் பரனவிதான 49, சந்தூஷ் குணதிலக்க 37, ஷிரான் பெர்னாண்டோ 23, சுபுன் காவிந்த 21, ஜெப்ரி வெண்டர்சே 20, ஹேஷான் ஹெட்டியாரச்சி 3/42

இராணுவ கிரிக்கெட் கழகம் – 179/10 (32.5) – அசேல குணரட்ன 40, சீக்குகே பிரசன்ன 29, பெதும் டில்ஷான் 26, பிரமோத் மதுஷான் 3/30, ஜெப்ரி வெண்டர்சே 3/48, ஷிரான் பெர்னாண்டோ 2/38

முடிவு – தமிழ் யூனியன் கழகம் 47 ஓட்டங்களால் வெற்றி

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 114/5 (31) – நிஷான் மதுஷ்க 41*, ஜனித் லியனகே 26, அவிஷ்க தரிந்து 21, சச்சிந்து கொலம்பகே 3/26

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<