பூட்டானிடமும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி

739

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) ஏற்பாட்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்று வரும், பெண்களுக்கான 15 வயதுக்குட்பட்ட SAFF கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியிலும், இலங்கை அணி 0-6 என்ற கோல்கள் கணக்கில் பூட்டான் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

SAFF தொடரில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை இளம் அணிக்கு மோசமான தோல்வி

பூட்டானில் ஆரம்பமான 15 வயதுக்கு உட்பட்ட SAFF மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப்….

A குழுவில் அங்கம் வகிக்கும் இலங்கை அணி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்திய 15 வயதுக்குட்பட்ட அணியுடனான போட்டியில், 12-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

இந்த நிலையில், தங்களுடைய A குழுவின் மற்றுமொரு அணியான போட்டியை நடத்தும், பூட்டான் அணியை திம்புவின் சங்கிமிதாங் மைதானத்தில் எதிர்கொண்ட இலங்கை இளம் வீராங்கனைகள் தொடரில் சிறந்த முடிவொன்றைப் பெறுவதற்காகவே இன்று களமிறங்கினர்.

போட்டியின் முதல் கோலை பூட்டான் அணி 9ஆவது நிமிடத்தில் அடித்தது. அந்த அணியின் சோனம் லெஹமோ பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் இருந்து அடித்த பந்து கோலாக மாறியது. எனினும், போட்டியின் அடுத்த அரை மணித்தியாலங்களும் இலங்கை அணி பூட்டான் அணியின் வாய்ப்புகளை கட்டுப்படுத்தி விளையாடியது.

பின்னர், சோனம் லெஹமோவினால் இரண்டாவது கோலும் பெறப்பட்டது. பெனால்டி எல்லையின் இடது பக்கத்துக்கு, பின்கள வீராங்கனை தட்டிக்கொடுத்த பந்தை, சோனம் லெஹமோ கோலுக்கு திருப்ப, மோசமான கோல் காப்பினால், பூட்டான் அணியின் முன்னிலை 2-0 என உயர்ந்தது. இலங்கை அணிக்கு பிரீ-கிக் வாய்ப்பு கிடைத்த போதிலும், அதனை முறையாக பயன்படுத்த தவறிய இலங்கை இளம் வீராங்கனைகளுக்கு முதற்பாதியில் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை.

முதல் பாதி: பூட்டான் 2 – 0 இலங்கை

தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது பாதியில் இலங்கை அணி சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பூட்டான் அணியை தங்களது கட்டுக்குள் வைத்திருந்தது. எனினும், பூட்டான் அணி பல வாய்ப்புகளை தவறவிட்டிருந்தது. எவ்வாறாயினும் 67ஆவது நிமிடத்தில் யெசி பித்தா தங்களது கோல்கள் எண்ணிக்கையை 3-0 என உயர்த்தினார்.

பார்சிலோனா அணித் தலைவராகிறார் மெஸ்ஸி

அன்ட்ரெஸ் இனியஸ்டாவுக்கு அடுத்து பார்சிலோனா அணியின் தலைவராக…

அதன் பின்னர் பூட்டான் அணியின் ஆதிக்கம் அதிகரித்தது. இலங்கை அணியின் கோல் எல்லையில் வெற்றிடங்கள் இருப்பதை அவதானித்த டெகி யெங்டன், தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி, வலையின் மூலை பகுதிக்கு பந்தை செலுத்தி அணிக்கான 4ஆவது கோலை பெற்றுக்கொடுத்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் சோனம் லெஹமோ தனது ஹெட்ரிக் கோலை பதிவுசெய்தார். கோல் காப்பாளருக்கு மேல் சென்ற பந்து, கம்பத்திற்குள் புகுத்தப்பட்டு, கோலாக மாற்றப்பட்டது. இறுதியில் யெசி பித்தா 83வது நிமிடத்தில் மற்றுமொரு கோலை அடித்து, அணியை 6-0 என வெற்றிபெறச் செய்தார்.

பூட்டான் சென்றுள்ள இலங்கை 15 வயதுக்குட்பட்ட மகளிர் அணி, தாங்கள் மோதிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: பூட்டான் 6 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

பூட்டான் – சோனம் லெஹமோ 9′,38′,79, யெசி பித்தா 67′,83, டெகி யெங்டன் 77′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<