கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் அறிமுகம்

1702

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பது புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யவுள்ளதாக மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் (MCC) குறிப்பிட்டிருக்கின்றது.

>>குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையும் குர்பாஸ்

கிரிக்கெட் விளையாட்டின் சட்டவிதிமுறைகளுக்கு சொந்தக்காரர்களாக காணப்படுகின்ற MCC, கடந்த வாரம் ஏற்பாடு செய்த தமது பிரதான குழுக் கூட்டத்தின் போதே புதிய விதிமுறைகளுக்கான அனுமதியினை வழங்கியிருக்கின்றது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதிமுறைகளில் முக்கிய விதிமுறையாக வீரர்களின் பிரதியீடு பற்றிய விதிமுறை காணப்படுகின்றது. இந்த விதிமுறையில் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பிரதியீடு செய்யப்படும் போது, பிரதியீடு செய்யப்படும் வீரர் தவறுகள் இழைக்கும் பட்சத்தில், குறித்த தவறுகளுக்கு பிரதியிடப்பட்ட வீரரும் காரணமாக அமைவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இரண்டாவது புதிய விதிமுறை வீரர்களின் ஆட்டமிழப்பு தொடர்பில் பேசுகின்றது. இந்த விதிமுறையில் துடுப்பாட்டவீரர் ஒருவர் பிடியெடுப்பில் ஆட்டமிழக்கும் போது, புதிய துடுப்பாட்டவீரர் அந்த வீரரின் முடிவுத் துடுப்பாட்ட முனை எதுவாக இருந்ததோ அதில் இருந்து புதிய பந்திற்காக துடுப்பாட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த விதிமுறை MCC இன் ஆலோசனைக்கு அமைய கடந்த ஆண்டு இங்கிலாந்தில் முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட “த ஹன்ரட்” தொடரில் பரீட்சார்த்த ரீதியில் உபயோகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது புதிய விதிமுறையில், Dead Ball தொடர்பிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதன்படி பந்து வீசப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அதற்கு மனிதர் ஒருவரினாலோ அல்லது விலங்கு ஒன்றினாலோ வெளித்தடை ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பந்து, Dead Ball என நடுவர்கள் மூலம் அழைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் Wide Ball தொடர்பிலான புதிய விதிமுறையும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

மற்றுமொரு புதிய விதிமுறையில், துடுப்பாட்ட வீரர்களுக்கு நன்மை சேர்க்கும் விதமாக ஆடுகளத்தினை விட்டு விலகிச் செல்லும் வகையில் உள்ள Dead Ball களை ஆடுகள எல்லைக்குள் ஆடுவதற்கான சந்தர்ப்பம் துடுப்பாட்டவீரர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதோடு, துடுப்பாட்ட வீரர்கள் குறித்த பந்தினை அடிக்க முடியாமல் செல்லும் போது அது நடுவர்கள் மூலம் No Ball என அழைக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>ஜிம்பாப்வே அணியின் புதிய தலைவர்களாக எர்வின், சீன் வில்லியம்ஸ்

அத்துடன் எஞ்சிய விதிமுறைகளில் முக்கியமானதாக களத்தடுப்பு தொடர்பிலான விதிமுறை அமைகின்றது. இந்த விதிமுறையில் களத்தடுப்பு அணி களத்தடுப்பு தவறுகளை மேற்கொள்ளும் போது, குறித்த தவறுக்காக துடுப்பாடும் அணி 5 அபாராத (Penalty) ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவை தவிர அறிமுகம் செய்யப்படவிருக்கும் புதிய விதிமுறைகளில் இறுதியாக எதிர்வரும் காலங்களில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் சந்தர்ப்பங்களில் பந்தின் மீது உமிழ்நீரினை உபயோகம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<