LPL தொடருடன் இணையும் வசீம் அக்ரம்

Lanka Premier League 2022

175
Sri Lanka Cricket

இலங்கையில் தற்போது விறவிறுப்பாக நடைபெற்று வருகின்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் சிறப்பு தூதுவரகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் வசீம் அக்ரம் மிக விரைவில் இலங்கை வருகை தரவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இன்று (21) முதல் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள  LPL தொடரின் பிளே-ஓப் சுற்று போட்டிகளின் போது அவர் இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சுல்தான் ஓஃப் ஸ்விங்’ என்று அழைக்கப்படும் வசீம் அக்ரம், பிளே-ஓப் சுற்று போட்டியின் போது பல இலங்கை கிரிக்கெட் வீரர்களை சந்திக்கவுள்ளதாகவும், மேலும் இறுதிப் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு LPL தொடரை நடத்துவதில் நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், அமைப்பாளர்கள் போட்டியை வெற்றிகரமாக நடத்தி அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு LPL போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னர் பல்வேறு தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும் தற்போது வெற்றிகரமாக அரையிறுதியை எட்டியுள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான திட்டமிடல்கள் குறித்து பல கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் அமைப்பாளர்களை பாராட்டியுள்ளனர்.

இதில் LPL தொடரின் சிறப்பு தூதுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய, இன்று முதல் நடைபெறவுள்ள பிளே-ஓப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியை கண்டுகளிக்க மைதானத்துக்கு வருமாறு இலங்கை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், இந்த தொடரில் விளையாடுகின்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், LPL தொடரின் மற்றுமொரு சிறப்பு தூதுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள வசீம் அக்ரம், LPL தொடரானது இலங்கையின் T20i ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்க உதவுகிறது என்றார்.

”இந்தப் போட்டி இலங்கையில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை வெளிக்கொண்டுவருகிறது, இந்த ஆண்டு ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி வென்றபோது அதற்கான ஆதாரத்தை நாங்கள் பார்த்தோம். இந்தப் போட்டியின் கடந்த இரண்டு பதிப்புகளை நான் பார்த்திருக்கிறேன், கிரிக்கெட்டின் தரம் முதலிடத்தில் இருந்தது. வரவிருக்கும் எல்பிஎல் பதிப்பிலும் வீரர்கள் அதைத் தக்கவைத்துக் கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<