Home Tamil சகல துறையிலும் அசத்திய ஜப்னா அணிக்கு 2ஆவது வெற்றி

சகல துறையிலும் அசத்திய ஜப்னா அணிக்கு 2ஆவது வெற்றி

Lanka Premier League 2022

808

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று பிற்பகல் (07) நடைபெற்ற மூன்றாவது போட்டியில், தம்புள்ள ஓரா அணியை எதிர்கொண்டு விளையாடிய ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மஹீஷ் தீக்ஷன, வியாஸ்காந்த் ஆகியோரது அபார பந்துவீச்சு மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தன.

இதன்மூலம் இம்முறை போட்டித் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரில், ஜப்னா கிங்ஸ் அணிக்கு இரண்டாவது போட்டியாகவும், தம்புள்ள ஓரா அணிக்கு முதல் போட்டியாகவும் அமைந்த தொடரின் மூன்றாவது போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று (07) நடைபெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கான தீர்மானத்தை தம்புள்ள ஓரா அணியின் தலைவர் தசுன் ஷானக மேற்கொண்டார்.

ஜப்னா கிங்ஸ் அணியைப் பொறுத்தமட்டில் நேற்று (06) நடைபெற்ற முதல் போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்குப் பதிலாக சதீர சமரவிக்ரம இணைத்துக்கொள்ளப்பட, டொம் கொலர் கெட்மோர் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்குப் பதிலாக சமான் கான் மற்றும் அஷான் ரன்திக ஆகிய இருவரும் இறுதிப் பதினொருவர் அணியில் இடம்பெற்றனர்.

நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஓரா அணிக்கு, ஜோர்டன் கொக்ஸ் – ஷெவோன் டேனியல் ஜோடி சிறந்த ஆரம்பம் ஒன்றினை வழங்கியது. இரண்டு வீரர்களும் தம்புள்ள அணியின் முதல் விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர். எனினும், தம்புள்ள அணியின் முதல் விக்கெட்டான ஜோர்டன் கொக்ஸ் 43 ஓட்டங்களுடன் யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 19 ஓட்டங்களைப் பெற்ற ஷெவோன் டேனியல் சமான் கானின் பந்துவீச்சில் அடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த அதிரடி வீரர் பானுக ராஜபக்ஷவும் 18 ஓட்டங்களை எடுத்த நிலையில் வியாஸ்காந்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுக்க தொடங்கிய தம்புள்ள ஓரா அணி, தமது முக்கிய துடுப்பாட்டவீரர்களான சிக்கந்தர் ராசா, அணித்தலைவர் தசுன் ஷானக போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுக்களை அவர்கள் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றினை எட்ட முடியாத நிலையில் பறிகொடுத்திருந்தது.

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் வெளியேற தம்புள்ள ஓரா அணிக்கு 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

கோல் கிளேடியட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஜோர்டன் கொக்ஸ் 22 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் பெற, இளம் வீரர் ஷெவோன் டேனியல் ஒரு சிக்ஸர்; மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 26 பந்துகளில் 19 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 2 பௌண்டரிகளுடன் 17 பந்துகளில் 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் புல்லர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதில் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வியாஸ்காந்த், இன்று நடைபெற்ற தம்புள்ள ஓரா அணிக்கெதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஆரம்ப வீரர் ஜோர்டன் கொக்ஸ், பானுக ராஜபக்ஷ மற்றும் நூர் அஹ்மட் ஆகியோரது விக்கெட்டுகளை வியாஸ்காந்த் வீழ்த்தியிருந்தார்.

இதன்மூலம் இம்முறை LPL தொடரில் 3 போட்டிகள் நிறைவுக்கு வரும் போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வியாஸ்காந்த், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 122 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சதீர சமரவிக்ரம மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரது சத இணைப்பாட்டத்துடன் பெற்றுக் கொள்ளப்பட்ட அரைச் சதங்களின் உதவியுடன் 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

>> LPL தொடரில் பங்கேற்றிருக்கும் தமிழ் வீரர்கள் யார்?; முழுமையான பார்வை | LPL 2022 

ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த சதீர சமரவிக்ரம T20i போட்டிகளில் தன்னுடைய 12ஆவது அரைச் சதத்துடன் 44 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களையும், உபாதைக்குப் பிறகு தனது முதல் சர்வதேச T20i லீக் போட்டியில் களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ, 14ஆவது T20i அரைச் சதத்துடன் 49 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதனிடையே தம்புள்ள ஓரா அணி 6 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்ததுடன், நூர் அஹ்மட் மாத்திரம் அவிஷ்க பெர்னாண்டோவின் விக்கெட்டினை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் ஆட்டமிழக்காமல் அரைச் சதம் விளாசிய சதீர சமரவிக்ரம பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜப்னா கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த நிலையில், கண்டி பெல்கன்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில், இன்று இரவு (07) கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Dambulla Aura
121/9 (20)

Jaffna Kings
122/1 (15.4)

Batsmen R B 4s 6s SR
Jordan Cox c Thisara Perera b Vijayakanth Viyaskanth 43 22 3 4 195.45
Shevon Daniel c James Fuller b Zaman Khan 19 26 1 1 73.08
Bhanuka Rajapaksha c James Fuller b Vijayakanth Viyaskanth 18 17 2 0 105.88
Sikandar Raza c Dunith wellalage b James Fuller 5 14 0 0 35.71
Dasun Shanaka c Dunith wellalage b Mahesh Theekshana 6 4 1 0 150.00
Ramesh Mendis c & b 10 14 0 0 71.43
Chathuranga de Silva c Dhananjaya de Silva b Mahesh Theekshana 1 2 0 0 50.00
Lahiru Madushanka c Zaman Khan b Mahesh Theekshana 1 3 0 0 33.33
Noor Ahmad  c Shoaib Malik b Vijayakanth Viyaskanth 2 5 0 0 40.00
Paul van Meekeren not out 11 11 2 0 100.00
Lahiru Kumara not out 1 2 0 0 50.00


Extras 4 (b 1 , lb 0 , nb 0, w 3, pen 0)
Total 121/9 (20 Overs, RR: 6.05)
Bowling O M R W Econ
Thisara Perera 2 0 10 0 5.00
Mahesh Theekshana 4 0 20 3 5.00
Dhananjaya de Silva 2 0 22 0 11.00
James Fuller 4 0 16 2 4.00
Zaman Khan 4 0 28 1 7.00
Vijayakanth Viyaskanth 4 0 24 3 6.00


Batsmen R B 4s 6s SR
Sadeera Samarawickrama not out 62 44 7 1 140.91
Avishka Fernando st Jordan Cox b Noor Ahmad  51 49 4 1 104.08
Ashan Randika not out 4 1 1 0 400.00


Extras 5 (b 1 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 122/1 (15.4 Overs, RR: 7.79)
Bowling O M R W Econ
Lahiru Kumara 3 0 27 0 9.00
Paul van Meekeren 2 0 19 0 9.50
Chathuranga de Silva 4 0 23 0 5.75
Sikandar Raza 2 0 12 0 6.00
Noor Ahmad  3.4 0 28 1 8.24
Dasun Shanaka 1 0 12 0 12.00



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<