இரண்டாவது டெஸ்டிலிருந்து வெளியேற்றப்படும் சகிப் அல் ஹசன்!

West Indies tour of Bangladesh 2021

116

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகிப் அல் ஹசனின் இடது தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடமாட்டார் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read : இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தடுப்பூசி?

சகிப் அல் ஹசனுக்கு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் வைத்திய குழாம் தொடர்ந்தும் சிகிச்சையளித்து வருகின்றது. எவ்வாறாயினும், இவர் அணியின் உயிரியல் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவார் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்தலின் பின்னர், சகிப் அல் ஹசன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இல்லை” என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

செட்டொக்ரமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, சகிப் அல் ஹசன் உபாதைக்கு உள்ளானார். தன்னுடைய பந்துவீச்சின் போது, பந்தொன்றை பாதத்தால் தடுக்க முற்பட்ட போது, இவருக்கு உபாதை ஏற்பட்டது. எனினும், இவர் அதன் பின்னரும் பந்துவீசியிருந்தார். ஆனால், இரண்டாவது நாள் பாதியின் பின்னர், அவர் களத்துக்கு வரவில்லை என்பதுடன், இரண்டாவது இன்னிங்ஸிலும் துடுப்பெடுத்தாடவில்லை.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சகிப் அல் ஹசன் 68 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், ஆறு ஓவர்களை மாத்திரமே வீசியிருந்தார். இந்தப்போட்டியில், பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில், மேற்கிந்திய தீவுகள் அணியை விட முன்னிலையில் இருந்தது. எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் அறிமுக போட்டியில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் வீரர் கெயல் மேயர், கன்னி போட்டியில், கன்னி இரட்டைச்சதத்தை கடந்ததுடன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

சகிப் அல் ஹசனின் உபாதையை பார்க்கும் நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, இடுப்பில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியின் பாதியில் களத்திலிருந்து வெளியேறியிருந்தார். எனினும், அதற்கு அடுத்த சில நாட்களில், பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்துடன் இணைந்து, பயிற்சிகளை ஆரம்பித்திருந்தார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக ஏற்கனவே, 18 பேர்கொண்ட குழாத்தை அறிவித்திருக்கும் நிலையில், சகிப் அல் ஹசனுக்கான மாற்று வீரரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க