கண்டி பெல்கோன்ஸ் அணியுடன் இணையும் சனத் ஜயசூரிய

Lanka Premier League 2022

211
Master Blaster to mentor the Kandy Falcons in LPL 2022

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரிய, இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் கண்டி பெல்கோன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் மூன்றாவது அத்தியாயம் இம்மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், இம்முறை LPL தொடருக்கான வீரர்கள் வரைவு (Players Draft) கடந்த செவ்வாய்கிழமை (05) இடம்பெற்றது.

இதனிடையே, இம்முறை LPL தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் கண்டி பெல்கோன்ஸ் (Kandy Falcons) அணியின் ஆலோசகராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை சனத் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘2022 LPL தொடரில் கண்டி பெல்கோன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகின்ற வாய்ப்பு கிடைத்தமை ஒரு பாக்கியம். பல ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவை செய்து அதன் வளர்ச்சிக்கு உதவி செய்ய கிடைத்தமை தொடர்பில் நான் மிகுந்த திருப்தி அடைந்துள்ளேன்.

எனவே, அந்தப் பயணத்தின் ஓர் அங்கமாக இம்முறை LPL தொடரில் கண்டி பெல்கோன்ஸ் அணிக்கு ஆலோசகராக செயற்படும் வாய்ப்பு கிடைத்தமை எனக்குக் கிடைத்த பாக்கியம். இது ஒரு அற்புதமான புதிய ஆரம்பமாக இருக்கும். இம்முறை LPL தொடரில் சந்திப்போம்’ என குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகின் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சனத் ஜயசூரிய தனது சகலதுறை திறமையால் இலங்கைக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், உலகின் முன்னணி T20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.

அத்துடன், குறித்த தொடரில் அதிவேக சதம் அடித்த வீராக வலம்வந்து கொண்டிருக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த ஆண்டுக்கான LPL தொடர் இம்மாதம் 31ஆம் திகதி முதல் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானம் மற்றும் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றில் நடைபெற உள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<