நோதம்டன்ஷெயார் அணிக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்த சீக்குகே பிரசன்ன

815

இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான சீக்குகே பிரசன்ன இங்கிலாந்து உள்ளூர் கழகமான நோதம்டன்ஷெயார் அணிக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

32 வயதான சீக்குகே பிரசன்ன, முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு நோதம்டன்ஷெயார் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதில் இங்கிலாந்து உள்ளூர் கழகங்களுக்கிடையில் நடைபெறும் நெட்வெஸ்ட் T-20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதற்தடவையாக விளையாடியிருந்த அவர் 10 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். எனினும், காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த வருடம் நடைபெற்ற போட்டித் தொடரில் அவ்வணிக்காக சீக்குகேவினால் விளையாட முடியாது போனது.

பாக். சுப்பர் லீக்கில் இணையும் திசர பெரேரா, அசேல குணரத்ன

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது பருவகால பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) T-20 போட்டித் தொடரில்…

இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவுள்ள 2018ஆம் ஆண்டுக்கான நெட்வெஸ்ட் T-20 பிளாஸ்ட் போட்டித் தொடர் முழுவதும், நோதம்டன்ஷெயார் அணிக்காக சீக்குகே பிரசன்ன விளையாடவுள்ளதாக அவ்வணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  

இதுதொடர்பில் நோதம்டன்ஷெயார் அணியின் பயிற்றுவிப்பாளர் டேவிட் ரிப்ளே கருத்து வெளியிடுகையில், சீக்குகே பிரசன்னவை மீண்டும் அணியுடன் இணைத்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்குகின்ற சீக்குகே, 2016 பருவகாலத்தில் எமது அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தமையை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, சீக்குகே பிரசன்ன கலந்துகொள்ளவுள்ள முதல் போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் 4ஆம் திகதி லெஸ்டெஷெயார் அணியுடன் நடைபெறவுள்ளது.

அண்மைக்காலமாக உலகம் பூராகவும் நடைபெற்று வரும் T-20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்ற சீக்குகே பிரசன்ன, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் T-20 தொடரில் மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட குல்னா டைடன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2011ஆம் ஆண்டு டெஸ்ட் வரம் பெற்று இலங்கை அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய சீக்குகே, இதுவரை 20 T-20 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.