தென்னாபிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை வரலாற்று வெற்றி

Sri Lanka Women's Tour of South Africa 2024

63
Sri lanka women's tour of south africa

தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஈஸ்ட் லண்டன், Buffalo Park விளையாட்டரங்கில் நேற்று (03) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 2க்கு 1 என்ற கணக்கில்  T20i தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. 

இதன்மூலம் தென்னாபிரிக்காவிற்;கு எதிராக அனைத்து வகையான மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி இதுவாகும்.   

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. 

அணித்தலைவி Laura Wolvaardt 47 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களையும், Nadine De Klerk 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். 

பந்துவீச்சில் சுகந்திகா குமாரி 3 விக்கெட்டுகளையும், உதேஷிகா பிரபோதனி, கவீஷா தில்ஹாரி மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 

தென்னாபிரிக்h மகளிர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. 

இதில் 2ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவி சமரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய இருவருக்கும் இடையே 97 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. மகளிருக்கான T20i போட்டிகளில் 2ஆவது விக்கெட்டுக்காக பகிரப்பட்ட அதிபட்ச இணைப்பாட்டமாகவும் இது இடம்பிடித்தது. 

இந்த தொடரின் முதலிரு போட்டிகளிலும் ஏமாற்றத்தைக் கொடுத்த அணித்தலைவி சமரி அத்தபத்து, 46 பந்துகளில் 73 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரம, தனது 5ஆவது T20i அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு அபார வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அவரது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கும். 

சர்வதேச கிரிக்கெட் பொருத்தவரை (ஒருநாள் மற்றும் T20i) தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு தொடர்களில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பெற்ற முதலாவது தொடர் வெற்றியாகவும் இந்த வெற்றி பதிவாகியுள்ளது. 

இப்போட்டியில் அதிரடியாக ஆடி அரைச் சதமடித்த இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து சிறப்பாட்டக்காரர் விருதை வென்றார். 

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட T20i கிரிக்கெட் தொடரை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 2 – 1 என்ற ஆட்டக்கணக்கில் கைப்பற்றியது. 

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை மகளிர் பதினொருவர் அணியுடனான பயிற்சிப் போட்டி 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.    

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<