ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த ரஜட் பட்டிதார்

Indian Premier League 2022

98
BCCI

கொல்கத்தாவில் நேற்று (25) இரவு நடைபெற்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) எலிமினேட்டர் போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையர் தகுதிபெற்றது.

இந்தப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ரஜட் பட்டிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஜட் பட்டிதார் 54 பந்துகளில் 12 பௌண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 112 ஓட்டங்களை விளாசினார்.

எனவே, றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் வெற்றிக்கு வித்திட்ட 28 வயதான ரஜட் பட்டிதார், ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றதுடன், பல முக்கிய சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

இந்திய அணியில் அறிமுகம் பெறாமல் IPL பிளே ஒப் சுற்றில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரஜட் பட்டிதார் பெற்றுள்ளார்.

அத்துடன், இம்முறை IPL தொடரில் பதிவாகிய அதிவேக சதமாக ரஜட் பட்டிதாரின் சதம் இடம்பிடித்ததுடன், IPL வரலாற்றில் பிளே ஒப் சுற்றில் றோயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது குவாலிபையரில் கிறிஸ் கெய்ல் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதே அதிகபட்ச ஓட்டங்களாக பதிவாகியது.

அதேபோல, இந்திய அணியில் விளையாடாமல் IPL போட்டியில் சதம் அடித்த 4ஆவது வீரராகவும் ரஜட் பட்டிதார் இடம்பிடித்தார். இதற்கு முன் மணிஷ் பாண்டே (2009), போல் வல்தாட்டி (2011), தேவ்தத் படிக்கல் (2021) ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.

அத்துடன், IPL வரலாற்றில் பிளே ஒப் சுற்றில் அடிக்கப்பட்ட ஐந்தாவது சதமாகவும் ரஜட் பட்டிதாரின் சதம் இடம்பிடித்தது. இதற்கு முன் சென்னை அணியின் ஷேன் வொட்சன் (2018, இறுதிப்போட்டி, எதிர்-சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 117 ஓட்டங்கள்), பஞ்சாப் அணியின் விருத்திமான் சஹா (2014, இறுதிப்போட்டி, எதிர்-கொல்கத்தா, 115 ஓட்டங்கள்), பஞ்சாப் அணியின் விரேந்திர சேவாக் (குவாலிபையர்-2, 2014, எதிர்–சென்னை, 122 ஓட்டங்கள்), சென்னை அணியின் முரளி விஜய் (குவாலிபையர்-2, 2012, எதிர்-டெல்லி, 112 ஓட்டங்கள்) ஆகியோர் இவ்வாறு சதம் அடித்தனர்.

எனவே, றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் முக்கிய பங்கு வகித்த ரஜட் பட்டிதார், கடந்தாண்டு றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக அறிமுகமாகி 4 போட்டிகளில் ஆடி 71 ஓட்டங்களை மட்டுமே குவித்தார். இதனால் இந்தாண்டு அவரை மெகா ஏலத்தில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி வாங்கவே இல்லை.

எவ்வாறாயினும், றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மெகா ஏலத்தில் வாங்கியிருந்த லுவ்னித் சிசோடியா காயம் காரணமாக IPL தொடரில் இருந்து வெளியேறினார். எனவே அவருக்கு மாற்று வீரராக ரஜட் பட்டிதார் 20 இலட்சத்திற்கு மீண்டும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜட் பட்டிதார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வீரர். 39 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 7 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களை அடித்துள்ளார், அதேபோல, 43 லிஸ்ட் A போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 48 T20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<