இலங்கையின் தந்திரோபாயங்களுக்கு பங்களாதேஷ் அதிருப்தி

Asia Cup 2022

1717

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுப்பட்ட போது அந்த அணி வீரர்களுக்கு ‘2D, D5’ இரகசிய குறியீடு அடங்கிய எழுத்துக்களை உடை மாற்றும் அறையில் இருந்து காண்பிக்கப்பட்டமை தொடர்பில் பங்களாதேஷ் அணி தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடந்த வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஆசியக் கிண்ண தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளால் திரில் வெற்றியீட்டி சுபர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்தப் போட்டிக்கு முன்னர் இரு நாடுகளையும் சேர்ந்த வீரர்கள், முன்னாள் வீரர்கள் இடையே மிகவும் கடுமையான வார்த்தைப் போர் ஏற்பட்டது.

இந்தப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்பு இரு அணிகளும் பேட்டிகளின் வழியாக மோதிக்கொண்டார்கள். பங்களாதேஷ் அணியில் இரண்டு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் (முஸ்தபிசூர் ரஹ்மான், சகில் அல் ஹசன்) மாத்திரம் தான் உள்ளார்கள். அவர்களைத் தவிர உலகத்தரமான பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் இல்லை என இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கூறினார்.

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மெஹெதி ஹசன், இலங்கை அணியின் தலைவரின் கருத்துக்கு மைதானத்தில் வைத்து பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இலங்கை அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என ஒருவர் கூட இல்லை என பங்களாதேஷ் அணியின் இயக்குநர் காலீத் மஹ்மூத் கூறினார்.

அதன் பின்னர், அந்த அறிக்கைக்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, இலங்கை அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லையா என்பதை போட்டியில் பார்க்கலாம் எனும் விதத்தில் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையில் மிகவும் பரபரப்பான முறையில் வார்த்தைப் போர் இடம்பெற்றாலும், மறுபுறத்தில் இலங்கை அணியின் வெற்றியை பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்கள் கூறும் கருத்துகள் மூலம் அதனை பார்க்க முடிந்தது.

இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் களத்தடுப்பில் ஈடுபட்ட இலங்கை அணித் தலைவர் மற்றும் வீரர்களுக்கு குறியீடுகள் மூலம் ஆலோசனை வழங்கியது முக்கிய பேசும்பொருளாக மாறியுள்ளது.

‘இது கிரிக்கெட், கால்பந்து அல்ல! மைதானத்திற்கு வெளியே இருந்து இவ்வாறு குறியீடுகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டால் தலைவருடைய பொறுப்பு என்ன?’ என்று பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இருப்பினும், இந்த தந்திரோபாயம் கிரிக்கெட்டில் முதன்முறையாக முயற்சிக்கப்படவில்லை என்பதையும், இது மிகவும் பழமையான ஒரு யுக்தி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன்னதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கிரிஸ் சில்வர்வூட் இருந்த போது, 2020 இல் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையேயான T20 தொடரில் இந்த யுக்தியை அறிமுகப்படுத்தினார். மேலும் இது அந்த நேரத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வோகனாலும் விமர்சிக்கப்பட்டது.

எனினும், அப்போதைய இங்கிலாந்து அணித் தலைவர் இயென் மோர்கன், அதில் தவறில்லை என்று கூறினார்.

‘அதில் எந்தத் தவறும் இல்லை, போட்டியின் நன்மதிப்பு 100 சதவீதம் பாதுகாக்கப்படும் வகையில் தான் நாங்கள் இதைச் செய்கிறோம். நாங்கள் பயிற்சியாளரிடமிருந்து சில பரிந்துரைகளை எடுத்துக்கொள்கிறோம். அதேபோல, எங்களிடம் உள்ள தகவல்களின் அளவை அதிகரித்துக் கொள்ள மாத்திரம் தான் நாங்கள் இவ்வாறு செய்கிறோம்’ என்று மோர்கன் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு மீண்டும் பேசுப்பொருளாக மாறியுள்ள இந்த யுக்தி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரிஸ் சில்வர்வூட்,

‘இது மிகவும் எளிமையான விடயம் மற்றும் பல அணிகள் இன்று பின்பற்றுகின்ற ஒரு யுக்தி. ஒரு வீரர் துடுப்பெடுத்தாடும் போது என்ன மாதிரியான மாற்றங்களை செய்யலாம் என சில ஆலோசனைகளை மட்டும் கொடுக்கின்றோம். அந்தப் பரிந்துரைகளை செய்யலாமா? கூடாதா என்பது முற்றிலும் அணித் தலைவரின் முடிவு. அதைத் தவிர, அணியை எப்படி வழிநடத்துவது என்று தலைவருக்குச் சொல்லப்படவில்லை’ என தெரிவித்தார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<