இரண்டாம் நாள் ஆட்டத்தில் துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை!

West Indies tour of Sri Lanka 2021

95
 

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டநேரம் மழைக்காரணமாக நிறைவுக்கு கொண்டுவரப்பட, மே.தீவுகள் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 69 ஓட்டங்களை பெற்றுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியின், முதல் நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 113 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முதல் நாளில் வலுப் பெற்றிருக்கும் இலங்கை

மிகவும் பலமான நிலையில் இன்றைய தினம் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, இன்றைய தினம் ஆரம்பத்திலிருந்து மிகப்பெரிய சறுக்கலை சந்தித்திருந்தது. குறிப்பாக, பெதும் நிஸ்ஸங்க மாத்திரம் 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இன்றைய தினம் ஆட்டமிழக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்களில், அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதையுடன் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

இதன்காரணமாக மதியபோசன இடைவேளைக்கு முன்னர் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழக்க, மேற்கிந்திய தீவுகள் சார்பில் வீரசாமி பெருமாள் தன்னுடைய அதிசிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவுசெய்து 5 விக்கெட்டுகளயும், ஜோமெல் வொரிகன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மதியபோசன இடைவேளைக்கு முன்னர் ஆட்டத்தை ஆரம்பித்த மே.தீவுகள் அணி, இடைவேளைக்கு முன்னர் விக்கெட்டிழப்பின்றி 2 ஓட்டங்களை பெற்றது. பின்னர், மே.தீவுகள் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது.

மே.தீவுகள் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜேர்மைன் பிளக்வூட் மற்றும் அணித்தலைவர் கிரைக் பிராத்வைட் ஆகியோர் சிறப்பாக ஆடி, அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்தனர். எனினும், பிளக்வூட், பிரவீன் ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, குரூமா போனர் களமிறங்கினார்.

எவ்வாறாயினும், இதனைத்தொடர்ந்து போட்டியில் மழைக்குறுக்கிட்டதால், ஆட்டம் தேநீர் இடைவேளைக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இதன்போது, மே.தீவுகள் அணி ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், கிரைக் பிராத்வைட் 22 ஓட்டங்களையும், குரூமா போனர் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். எனினும், போட்டியில் தொடர்ந்தும் மழைக்குறுக்கிட்டதால், ஆட்டநேரம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி, தங்களுடைய முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியைவிட 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<