ஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ – கைல் சகோதரர்களுக்கு தோல்வி

150

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலில் கலந்துகொண்ட இலங்கை வீரர்களான மெத்யூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க சகோதரர்கள் முதல் சுற்றுடன் ஏமாற்றம் அளித்தனர்.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா 3ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கை வீரர்கள் நீச்சல், குத்துச்சண்டை, கபடி, வூஷு, கூடைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ அபேசிங்க புதிய தேசிய சாதனை

இந்தோனேஷியாவில் நடைபெற்றுவருகின்ற 18ஆவது…

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் ஆறாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, 22.88 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து 5ஆவது இடத்தையே பிடித்தார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, 22.65 செக்கன்களில் போட்டியை நீந்தி முடித்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், அந்தப் போட்டியிலும் மெத்யூ அபேசிங்கவுக்கு 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதேநேரம், 50 மீற்றர் சாதாரண நீச்சலின் ஏழாவது தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட கைல் அபேசிங்க, போட்டியை 23.36 செக்கன்களில் நீந்தி 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, 51 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 12ஆவது மற்றும் 20 ஆவது இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டனர்.

ஜப்பானிடம் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி

ஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் இலங்கை…

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெத்யூ அபேசிங்க, போட்டிகளின் முதல் நாளான கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு (1:50:97 செக்.) 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதே போட்டிப் பிரிவின் 2ஆவது தகுதிச் சுற்றில் பங்குபற்றிய மற்றுமொரு இலங்கை வீரரான கவிந்திர நுகவெல, 1:56:01 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 6ஆவது மற்றும் 26ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டதால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட சிரன்ந்த டி சில்வா, போட்டியை 2:05:90 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு விழா அமர்க்களமாக ஆரம்பம்

உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (செலமாட் டாட்டூங்) என்ற அழகிய…

இதேவேளை, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டவரும், இந்தோனேஷியாவில் தற்போது உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்து வருகின்ற இளம் நீச்சல் வீரருமான அகலங்க பீரிஸ் நேற்று (20) நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில் பங்குபற்றியிருந்தார். குறித்த போட்டியை 26.57 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 4ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீரர்கள் பங்குபற்றவுள்ள கடைசிப் போட்டி நாளை (22) நடைபெறவுள்ளது. ஆண்களுக்கான 4X100 சாதாரண நீச்சல் அஞ்சலோட்டத்தில் 2ஆவது தகுதிகாண் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள மெத்யூ அபேசிங்க தலைமையிலான இலங்கை அணி, பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<