பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறும் லியம் லிவிங்ஸ்டன்!

England tour of Pakistan 2022

162
Liam Livingstone

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து லியம் லிவிங்ஸ்டன் வெளியேறியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது, லியம் லிவிங்ஸ்டனின் முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டது.

>> LPL தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

உபாதையின் பின்னர் களத்திலிருந்து வெளியேறிய இவர், தொடர்ந்து களத்தடுப்பில் ஈடுபடவில்லை என்பதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 8ம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாட களமிறங்கினார். இதன் பின்னரும் இவர் களத்தடுப்புக்கு திரும்பவில்லை.

இந்தநிலையில் லியம் லிவிங்ஸ்டனின் உபாதை தீவிரமாக உள்ளதால், அவர் முழு தொடரிலிருந்து வெளியேற்றப்படுகின்றார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதேநேரம் அவர் இன்று (06) இங்கிலாந்துக்கு பயணிக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லியம் லிவிங்ஸ்டன் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், மாற்று வீரராக எவரும் அறிவிக்கப்படவில்லை. எனவே குழாத்தில் உள்ள விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் பென் போக்ஸ் அணியில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமாத்திரமின்றி அடுத்த டெஸ்ட் போட்டியில் மார்க் வூட் அல்லது இளம் வீரர் ரெஹான் அஹமட் ஆகியோரில் ஒருவரும் விளையாடலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 9ம் திகதி முல்தானில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<