விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்ட பெரேரா, மாலிங்க

68

பிரபல கிரிக்கெட் விளையாட்டு இணையத்தளமான இ.எஸ்.பி.என். க்ரிக் இன்போ (ESPNcricinfo) இணையத்தளம், கடந்த வருடம் சர்வதேச அரங்கில் ஜொலித்த வீரர்களுக்கான விருதுப் பட்டியலை நேற்றைய தினம் (10) அறிவித்துள்ளது.

இந்த விருதுப் பட்டியலில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

பாகிஸ்தானிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்த பங்களாதேஷ்!

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான …………..

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் குசல் பெரேரா. இவர், இறுதி துடுப்பாட்ட வீரரான விஷ்வ பெர்னாண்டோவுடன் இணைந்து 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தார்.

முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 153 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், இலங்கைக்கு வரலாற்று வெற்றியையும் பெற்றுக்கொடுத்த குசல் பெரேராவின் இன்னிங்ஸ் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸிற்காக தெரிவுசெய்யப்பட்டது.

அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு எதிராக பல்லேகலையில் நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் இலங்கை அணியின் லசித் மாலிங்க தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மொத்தமாக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

T20 போட்டிகளில் மிகச்சிறந்த அணியாக வலம்வரும் நியூசிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றிய லசித் மாலிங்கவின் பந்துவீச்சு பிரதி கடந்த ஆண்டுக்கான சிறந்த T20 பந்துவீச்சு பிரதியாக தெரிவுசெய்யப்பட்டது.

குறிப்பிட்ட இந்த விருதுகளை தவிர்த்து, ஐசிசி இன் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் ஆண்டின் சிறந்த தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்ற பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆண்டின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளராக நியூஸிலாந்தின் மெட் ஹென்ரி தெரிவானார். இந்திய அணிக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இவர் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாகியிருந்தார்.

ஆண்டின் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளராக மேற்கிந்திய தீவுகளின் கெமார் ரோச் தெரிவு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய கெமார் ரோச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், இங்கிலாந்து அணி 77 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. குறித்த பந்துவீச்சு இன்னிங்சுக்காகவே ரோச்சிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆண்டின் சிறந்த T20 துடுப்பாட்ட வீரராக அவுஸ்ரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த அறிமுக வீரருக்கான விருதை இங்கிலாந்தின் புதுமுக வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், பெண்கள் கிரிக்கெட்டுக்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக அவுஸ்ரேலியாவின் மெக் லேன்னிங் தெரிவாக, சிறந்த பந்துவீச்சாளராக எல்லீஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<