மீண்டும் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர்

8708

கிரிக்கெட் உலகின் முன்னாள் முன்னணி நட்சத்திரங்கள் பங்குபெறும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு, இரண்டு தடவைகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>இளையோர் ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றும் இலங்கை அணி UAE பயணம்

இதில் முதல் லெஜண்ட்ஸ் தொடர் 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் ஓமானில் இடம்பெறவிருக்கின்றது.

மொத்தம் மூன்று அணிகள் பங்குபெறவுள்ள இந்த தொடரில், ஆசிய லெஜண்ட்ஸ் பதினொருவர் அணி, உலக பதினொருவர் அணி மற்றும் இந்திய பதினொருவர் அணி ஆகியவை பங்கெடுக்கவிருக்கின்றன.

இந்த லெஜன்ட்ஸ் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்களான ரொமேஷ் களுவிதாரன, சனத் ஜயசூரிய, உபுல் தரங்க மற்றும் டி.எம். டில்சான் ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதோடு ஆசிய லெஜண்ட்ஸ் அணியில் இலங்கை வீரர்களுடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த லெஜண்ட்ஸ் தொடரில் பங்கெடுக்கும் மூன்று அணிகளும், தொடரின் குழுநிலைப் போட்டிகளில் இரண்டு தடவைகள் மோதவிருப்பதோடு, குழுநிலைப் போட்டிகளை அடுத்து புள்ளிகள் அடிப்படையில் இரு அணிகள் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>இலங்கை வீரர்களுக்கான உடற்தகுதி தரநிலைகள் அதிகரிப்பு

இந்த லெஜண்ட்ஸ் தொடர் 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

இந்த தொடரின் பின்னர் 2022ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ஆம் திகதி வரை அடுத்த லெஜண்ட்ஸ் தொடராக, வீதிப் பாதுகாப்பு உலக தொடர் இரண்டாவது முறையாக இடம்பெறவிருக்கின்றது.

கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்ததோடு, அந்த தொடரில் இரண்டாம் இடத்திற்கான பட்டத்தினை இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கடந்த ஆண்டுக்கான தொடரில் இலங்கையினைச் சேர்ந்த திலகரட்ன டில்ஷான் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்ததோடு, அவர் கடந்த தொடரில் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி, 271 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அடுத்த ஆண்டுக்கான வீதிப்பாதுகாப்பு உலக தொடரில் எட்டு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடரில் பங்கெடுக்கும் அணிகள்

  1. இலங்கை லெஜண்ட்ஸ்
  2. நியூசிலாந்து லெஜண்ட்ஸ்
  3. இந்தியா லெஜண்ட்ஸ்
  4. பங்களாதேஷ் லெஜண்ட்ஸ்
  5. மேற்கிந்திய தீவுகள் லெஜண்ட்ஸ்
  6. அவுஸ்திரேலிய லெஜண்ட்ஸ்
  7. தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ்
  8. இங்கிலாந்து லெஜண்ட்ஸ்

இந்த வீதிப்பாதுகாப்பு உலக தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற திசர பெரேரா, இசுரு உதான ஆகியோர் தவிர ஏனைய முன்னாள் வீரர்கள் பங்கெடுப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<