இளையோர் ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றும் இலங்கை அணி UAE பயணம்

481

19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள 17 பேர் கொண்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் குழாம் நேற்று (21) பிற்பகல் ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கிச புறப்பட்டுச் சென்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் நாளை (23) முதல் திகதி இம்மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக துனித் வெல்லலகே செயல்படவுள்ளார்.

இதில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை மேலும் வலுப்படுத்தும் வகையில் மற்றுமொரு மேலதிக துடுப்பாட்ட வீரராக கொழும்பு, லும்பினி கல்லூரியின் மாணவன் சகுன லியனகேவை இலங்கைக் குழாத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த தொடருக்கான இலங்கைக் குழாத்தில் இடம்பிடித்துள்ள ஏனைய வீரர்கள் அனைவரும் சமீபத்தில் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் ஆவர்.

எனவே, ஒட்டுமொத்தத்தில் இம்முறை இளையோர் ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றவுள்ள இலங்கைக் குழாத்தில் ஏழு முன்னணி துடுப்பாட்ட வீரர்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு விக்கெட் காப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, அணித்தலைவர் துனித் வெல்லலகே, சமிந்து விக்ரமசிங்க மற்றும் யசிரு ரொட்ரிகோ ஆகியோர் சகலதுறை ஆட்டக்காரர்களாக அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அபிஷேக் லியனாராச்சி, சதீஷ ராஜபக்ஷ, ஷெவோன் டேனியல், பவன் பதிராஜ, ரவீன் டி சில்வா, ரனுத சோமரத்ன மற்றும் சகுன லியனகே ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாகவும், சமிந்து விக்ரமசிங்க, யசிரு ரொட்ரிகோ, வினுஜ ரன்புல், மதீஷ பத்திரன ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் செயல்படவுள்ளனர்.

துனித் வெல்லலகே, வனுஜ சஹான், மல்ஷ தருபதி மற்றும் ட்ரெவின் மெதிவ் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், அஞ்சல பண்டார மற்றும் சதீஷ் ஜயவர்தன ஆகியோர் விக்கெட் காப்பாளர்களாக செயல்டபவுள்ளனர்.

இதேவேளை, இளையோர் ஆசிய கிண்ணத்தை இலக்காகக் கொண்டு, இலங்கை இளையோர் அணி கடந்த சில மாதங்களாக வதிவிட பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டதுடன், நடப்பு உலகச் சம்பியனான பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடி இருந்தது.

இதில் பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 5-0 எனவும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 எனவும் இலங்கை இளையோர் அணி கைப்பற்றியது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் B பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, தமது முதல் போட்டியில் டிசம்பர் நாளை மறுதினம் (24) குவைத்தை எதிர்கொள்கிறது.

அதேநேரம் எதிர்வரும் 26ஆம் திகதி நேபாளத்துடனும், 28ஆம் திகதி பங்களாதே{டனும் பலப்பரீட்சை நடத்தும்.

லீக் முறையின் நடைபெறவுள்ள முதல் சுற்றுக்குப் பிறகு இரண்டு பிரிவிலும் முதலிரெண்டு இடங்களையும் பிடிக்கும் நான்கு அணிகளுக்கு இடையில் அரையிறுதிப் போட்டி நடைபெறும். அதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டி டிசம்பர் 31ஆம் திகதி நடைபெறும்.

இலங்கை இளையோர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன செயல்படவுள்ளதுடன், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக உபுல் சந்தனவும், சுழல் பந்து பயிற்சியாளராக சச்சித் பத்திரனவும், வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமில கமகேயும், துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக தம்மிக்க சுதர்ஷன ஆகியோரும் செயல்படவுள்ளனர். அத்துடன். ஆணியின் முகாமையாளராக மஹிந்த ஹலங்கொட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<