IPL 2023 தொடரை தவறவிடும் நட்சத்திரங்கள்

Indian Premier League 2023

298

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டிற்கான 16ஆவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரானது வெள்ளிக்கிழமை (31) அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மொத்தமாக 74 போட்டிகளைக் கொண்ட இம்முறை போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இம்முறை ஐபிஎல் தொடரில் டெல்லி கெபிடல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் தங்களுடைய முதல் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு களமிறங்கவுள்ள நிலையில், முன்னாள் சம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் நீண்ட காலமாக சந்தித்து வரும் தோல்விகளுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முற்றுப்புள்ளி வைத்து சம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கின்றன.

மீண்டும் கிரிக்கெட்டில் புதிய விதிகள்

இதனிடையே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஏராளமான வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். அதேபோல, ஒருசில வீரர்கள் பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இம்முறை ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சில வீரர்கள் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே வெளியேறுகின்றனர். சிலர் இந்திய வீரர்கள் பாதி ஐபிஎல் போட்டி முடிந்த பிறகே அணியில் இணைகின்றனர்.

இவ்வாறு அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்தந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

எனவே, எந்தெந்த அணிகளிலிருந்து எந்தெந்த வீரர்கள் விலகியுள்ளனர் என்ற பட்டியலை கீழே காணலாம்.

ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)

ஐபிஎல் தொடரில் ஐந்து தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என்றே சொல்லலாம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்குப் பிறகு, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அறுவை சிகிச்சையொன்றையும் செய்த அவர், பிறகு இந்திய தேசிய அகடமியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணம், T20 உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய தொடர்களை அவர் தவறவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா பெயரிடப்பட்டார். எவ்வாறாயினும், முதுகில் ஏற்பட்ட காயம் பூரண குணமடையாத காரணத்தால் குறித்த தொடரிலிருந்தும் விலகிய அவர், சமீபத்தில் நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக உள்ள பும்ராவின் பங்களிப்பினை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவ்வணி தவறவிடவுள்ளதுடன், அது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையவுள்ளது.

இதேவேளை, இம்முறை ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக விளையாடுகின்ற மாற்றீடு வீரர் குறித்த அறிவிப்பை மும்பை அணி நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை.

ரிஷப் பாண்ட் (டெல்லி கெபிடல்ஸ்)

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பாண்ட் கடந்த ஆண்டு உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து தப்பித்து, தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதையடுத்து, இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். எனவே, இம்முறை ஐபிஎல் தொடரில் ரிஷப் பாண்ட்டுக்குப் பதிலாக டேவிட் வோர்னர் டெல்லி அணியை வழிநடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் பெங்கால் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளராக செயல்பட்டு வருவதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் விக்கெட் காப்பாளராக அவரை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அபிஷேக் போரல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசியின் 19 வயதின் கீழ் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஒரு அங்கத்தவராக இருந்தார். இதுவரை 16 முதல் தர, 3 லிஸ்ட் ஏ மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியில் பாதியிலேயே விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை.

IPL 2022: Nitish, Rinku exploits will give Shreyas Iyer confidence to bat freely, reckons Sunil Gavaskar

இதில் அவுஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள், காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 7-8 மாதங்கள் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் இவரால் விளையாட முடியாது என்றும் மருத்துவர்களால் கூறப்பட்டது.

பெங்களூர் அணியிலிருந்து வெளியேறும் முன்னணி வீரர்

எனவே இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணம் மிகவும் முக்கியம் என்பதால் அறுவை சிகிச்சை வேண்டாம், தற்காலிக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன் என ஸ்ரேயாஸ் ஐயர் உறுதியாக வலியுறுத்தியுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் எனவும், இரண்டாம் பாதியில் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் முதல் பாதியின் தற்காலிக தலைவராக நிதிஷ் ராணாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரசித் கிருஷ்ணா (ராஜஸ்தான் றோயல்ஸ்)

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கடந்த சில மாதங்களாக இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சர்வதேசப் போட்டிகள் மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடவில்லை. இந்த காயம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

கடந்த 2022 ஐபிஎல் தொடரில் 10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 2008ஆம் ஆண்டுக்குப் பின் ராஜஸ்தான் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணிக்காகவும் தேர்வாகி கணிசமான போட்டிகளில் விளையாடிய அவர் சமீபத்திய உள்ளூர் தொடரில் காயத்துக்கு உள்ளாகினார்.

இந்த நிலையில், இவருக்கான மாற்று வீரராக சந்திப் ஷர்மாவை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. கடந்த பருவங்களில் இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைல் ஜேமிசன் (சென்னை சுபர் கிங்ஸ்)

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் கைல் ஜேமிசன் முதுகுவலி உபாதை காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இதனையடுத்து கைல் ஜேமிசனுக்குப் பதிலாக தென்னாபிரிக்கா வேகப் பந்துவீச்சாளர் சிசண்டா மகாலாவை சென்னை சுபர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

32 வயதான சிசண்டா மகாலா, தென்னாபிரிக்கா அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 4 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அண்மையில் நடைபெற்ற SA20 லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடி 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இறுதிப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜே ரிச்சர்ட்சன் (மும்பை இந்தியன்ஸ்)

இம்முறை ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஜஸ்பிரித் விலகிய நிலையில் அந்த அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான ஜே றிச்சர்ட்சன் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற அவுஸ்திரேலியா அணியில் இடம்பெற்ற ஜே ரிச்சர்ட்சனுக்கு  பிக்பேஷ் லீக் தொடரில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்த நிலையில் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை அறிவித்த CSK அணி

இம்முறை ஐபிஎல் மினி ஏலத்தில் 1.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஜே ரிச்சர்ட்சன் தொடரில் இருந்து விலகியுள்ளது மும்பை அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்றால் அது மிகையாகாது. மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் ஜே ரிச்சர்ட்சன் பங்கேற்பதும் சந்தேகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 26 வயதான ஜே ரிச்சர்ட்சன், அவுஸ்திரேலியாவுக்காக மூன்று டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 18 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதனிடையே, பும்ராவைப் போல ஜே ரிச்சர்ட்சனுக்கான மாற்றீடு வீரரை மும்பை அணி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை.

வில் ஜெக்ஸ் (றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்)

இங்கிலாந்தின் அதிரடி சகலதுறை வீரரான வில் ஜெக்ஸை, இம்முறை ஐபிஎல் மினி ஏலத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3.2 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தொடைப் பகுதியில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் தனது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்குவதற்கு முன்பாகவே விலகியுள்ளார்.

இதனால் இம்முறை ஐபிஎல் தொடரில் அவருக்குப் பதிலாக நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் மைக்கல் பிரேஸ்வலை பெங்களூர் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜொனி பேர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்)

பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஜொனி பேர்ஸ்டோ இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

சுமார் எட்டு மாத காலமாக அவர் எந்தவித சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடவில்லை. கடைசியாக ஜூலை மாதம் விளையாடினார். அதன் பிறகு கோல்ப் விளையாடியபோது இடது காலில் பலமாக அடிபட்டு எலும்பு முறிவு மற்றும் கணுக்கால் சிதைந்ததில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தார்.

மெல்ல மெல்ல குணமடைந்து வரும் பேர்ஸ்டோ எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள ஆஷஸ் தொடருக்கு மிகமுக்கிய வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். ஆகையால் அதற்குள் அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காக அவருக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேர்ஸ்டோவுக்குப் பதிலாக மாற்றீடு வீரராக அவுஸ்திரேலிய வீரர் மெத்யூ ஷோர்ட்டை ஒப்பந்தம் செய்ய பஞ்சாப் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகாத மெத்தியூ ஷோர்ட், சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பேஷ் லீக் தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<