தெற்காசிய போட்டிகளுக்குத் தகுதி பெற்ற சண்முகேஸ்வரன்: சபான், அரவிந்த் வெற்றி

258

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் இலங்கை சார்பாக பங்கேற்கும் வாய்ப்பை ஹட்டன் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த குமார்  சண்முகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

97ஆவது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டித் தொடரின் இரண்டாவது நாளான நேற்று (17) மாலை ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டி நடைபெற்றது

தனது மீள்வருகையை வெற்றியுடன் ஆரம்பித்த அனித்தா : டக்சிதாவுக்கு இரண்டாமிடம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 97ஆவது தேசிய..

பலத்த போட்டிக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த போட்டியை 31 நிமிடங்கள் 00.46 செக்கன்களில் நிறைவு செய்த சண்முகேஸ்வரன் தங்கப் பதகத்தினை வென்றார். இதன்மூலம் இவ்வருட இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டார்.  

இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சண்முகேஸ்வரன், கடந்த வருடம் மாத்திரம் தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருந்தார்

இதில் தேசிய விளையாட்டு விழா, தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பெற்றுக்கொண்டு வென்ற தங்கப் பதக்கங்களும் உள்ளடங்கும்

இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் எமது இணையத்தளத்துக்கு சண்முகேஸ்வரன் வழங்கிய செவ்வியில்

”இந்த வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும், எதிர்பார்த்ததளவு நேரத்தில் என்னால் போட்டியை நிறைவு செய்ய முடியாமல் போனது. அதற்கு காலநிலையும், போட்டியை மாலை நேரத்தில் வைத்தமையும் முக்கிய காரணமாக இருந்தது.  

எனவே, காலை நேரத்தில் இந்தப் போட்டியை வைத்திருந்தால் நிச்சயம் சிறந்ததொரு நேரப் பெறுமதியைப் பெற்றிருப்பேன். எதுஎவ்வாறாயினும், தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்று கொடுப்பேன்” என தெரிவித்தார்

முன்னதாக, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையிலான அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும், ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்ட அவர், இறுதியாக நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதகத்தினை வென்று அசத்தினார்.

இதேநேரம், குறித்த போட்டியில் சண்முகேஸ்வரனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த குமார போட்டியை 31 நிமிடங்கள் 00.77 செக்கன்களில் நிறைவுசெய்து 31 செக்கன்களினால் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.

Photos: 97th National Athletics Championship – Day 2

ThePapare.com | Hiran Weerakkody & Waruna Lakmal | 17/08/2019 Editing and re-using images..

அத்துடன், இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு வீரரான குமார பண்டார (31 நிமி. 00.98 செக்.) போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, குறித்த போட்டியில் இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மலையகத்தைச் சேர்ந்த எம். சிவராஜன் போட்டியில் 7ஆவது இடத்தையும், நுவரெலியாவைச் சேர்ந்த வி. வக்ஷான் 9ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

ஷ்ரப்புக்கு ஆறாமிடம்

நேற்று (17) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட, இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மொஹமட் ஷ்ரப், போட்டியை 10.83 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், அவருடன் போட்டியிட்ட மற்றுமொரு இளம் குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் சபான் 8ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். போட்டியை நிறைவுசெய்ய 10.90 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்

முப்பாய்ச்சலில் சாப் விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்றார் சப்ரின் அஹமட்

தேசிய மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்துக்காக..

சபான், பாசிலுக்கு வெற்றி

ஆண்களுக்கான 200 மீற்றர் தகுதிச் சுற்று ஓட்டப் போட்டிகள் நேற்று (17) மாலை நடைபெற்றன. இதில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கோண்ட மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.59 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அதே போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களான ரஜாஸ்கான் இரண்டாவது இடத்தையும் (21.91 செக்.) அஹமட் இஜாஸ் (22.51 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன், மொஹமட் நௌஷாத் 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர்  4ஆவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான பாசில் உடையார், 21.77 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பெற்றார்.

அதே சுற்றில் பாசிலுடன் போட்டியிட்ட வட மாகாணத்தின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான எம். பிரேம்தாஸ் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை நிறைவுசெய்ய 22.60 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்

இறுதிப் போட்டியில் அரவிந்தன்

இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 800 மீற்றர் தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பதுளையைச் சேர்ந்த சந்திரகுமார் அரவிந்தன் இரண்டாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். போட்டியை அவர் ஒரு நிமிடமும் 51.19 செக்கன்களில் கடந்தார்.

அதேபோட்டியில் அரவிந்தனுடன் போட்டியிட்ட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான ஆர்.எம் நிப்ராஸ், போட்டியை ஒரு நிமிடமும் 54.77 செக்கன்களில் ஓடிமுடித்து 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்

சப்ரினுக்கு ஏமாற்றம்

இம்முறை தேசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கத்தினை வென்று தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட சப்ரின் அஹமட், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தல் ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்குகொண்டார்.

இலங்கையின் முன்னணி வீரர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் 7.30 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த சப்ரின் அஹமட் எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<