முப்பாய்ச்சலில் சாப் விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்றார் சப்ரின் அஹமட்

350
97th Athletics Championship

தேசிய மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற வெலிகமையைச் சேர்ந்த சப்ரின் அஹமட், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 16.33 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 97 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று (16) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. 

போட்டிகளின் முதல் நாளான இன்று காலை ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய மட்டத்தில் முன்னிலை வகிக்கின்ற பல வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். 

இதில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட சப்ரின் அஹமட், 16.33 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இது சப்ரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிசிறந்த தூரமாகவும் பதிவாகியது.

முன்னதாக இவ்வருட முற்பகுதியில் ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 16.79 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தேசிய சாதனை படைத்த கிரேஷன் தனஞ்சவை சப்ரின் அஹமட் வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குகொண்ட சப்ரின் அஹமட், 15.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தனது வெற்றி குறித்து சப்ரின் அஹமட் கருத்து வெளியிடுகையில், ”தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது முதலாவது சர்வதேசப் போட்டித் தொடராகும். இந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள காரணமாக இருந்த எனது பயிற்சியாளர், இலங்கை இராணுவம் மற்றும் பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அத்துடன், தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டு இலங்கைக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன்” என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், 16.10 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இராணுவத்தைச் சேர்ந்த கிரேசன் தனஞ்சய வெள்ளிப் பதக்கத்தையும், 15.76 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இராணுவத்தைச் சேர்ந்த எம். ஆரியரத்ன வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

முதலாம் நாள் போட்டிகளின் புகைப்படங்களைப் பார்வையிட…

இறுதிப் போட்டியில் பவிதரன்

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று காலை நடைபெற்றது. இதில் அண்மைக்காலமாக கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்டனர்.

இதில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. பவிதரன் 4.40 மீற்றர் உயரத்தைத் தாவி இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

தேசிய மட்டப் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தலில் பிரகாசித்து வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ.புவிதரனின் சகோதரனான இவர், முதல் தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குபற்றி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம், யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த எஸ். சுகிர்தன் 4.05 மீற்றர் உயரத்தைத் தாவி 7 ஆவது இடத்தையும், யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ். கபில்ஷன் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

100 மீற்றரில் சபான் மற்றும் அஷ்ரப்

இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் 3 ஆவது தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டி தூரத்தை 10.80 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். 

அதே போட்டியில் பங்குகொண்ட பாஸில் உடையார், போட்டி தூரத்தை 10.80 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டாலும் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதே நேரம், ஆண்களுக்கான 100 மீற்றர் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் அஷ்ரப், 10.74 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் நாளை (17) காலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். 

ஷிக்குக்கு ஏமாற்றம் 

ஆண்களுக்கான தட்டெறிதலில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட Z.T.M. ஆஷிக் 43.22 மீற்றர் தூரத்தை எறிந்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். 

குறித்த போட்டியில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த சி.யு ஜயவர்தன 50.59 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள, இராணுவத்தின் எஸ்.பி.ஜே பந்துல (43.90 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த எம்.எஸ் நிரோஷன வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

டயலொக் கனிஷ்ட தேசிய கரப்பந்து சம்பியன்ஷிப் இவ்வாரம் ஆரம்பம்

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின்……

நிமாலி தேசிய சாதனை

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் 9 வருடங்களுக்குப் பிறகு பங்குகொண்ட இலங்கையின் மத்திய தூர நட்சத்திர வீராங்கனையான நிமாலி லியனாரச்சி, போட்டித் தூரத்தை 4 நிமிடங்கள் 15.86 செக்கன்களில் ஓடி முடித்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். 

முன்னதாக 2012 ஆம் ஆண்டு சம்பிக்கா தில்ருக்ஷி, 4 நிமிடங்கள் 16.42 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை 7 வருடங்களுக்குப் பிறகு நிமாலி லியனாரச்சி முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கயந்திகா அபேரத்ன (4 நிமி. 22.24 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், என். ஏ. குமாரி (4 நிமி. 49.77 செக்.)  வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்.

சுகந்தி, விதூஷா, தம்மிக அபாரம்

இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நிலானி ரத்னாயக்க, 9 நிமிடங்கள் 50.74 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதேநேரம், பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட தேசிய முப்பாய்ச்சல் சம்பியனான விதூஷா லக்ஷானி, 6.23 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார். 

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட லக்ஷிகா சுகந்தி, 13.59 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

குறித்த போட்டிப் பிரிவில் தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவுசெய்த அவர், இரண்டாவது தடவையாகவும் தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.

இதனிடையே, ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய ரொஷான் தம்மிக்க ரணதுங்க, 14.16 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<