தனது மீள்வருகையை வெற்றியுடன் ஆரம்பித்த அனித்தா : டக்சிதாவுக்கு இரண்டாமிடம்

1073

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட வடக்கின் நட்சத்திர வீராங்கனையான அனித்தா ஜெகதீஸ்வரன், 3.33 மீற்றர் உயரத்தைத் தாவி மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

அதே போட்டிப் பிரிவில் களமிறங்கிய வட மாகாணத்தின் மற்றுமொரு வளர்ந்துவரும் இளம் வீராங்கனையான என்.டக்சிதா 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். 

முப்பாய்ச்சலில் சாப் விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்றார் சப்ரின் அஹமட்

தேசிய மட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில்….

97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று (16) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இந்த நிலையில் போட்டிகளுக்கான இரண்டாம் நாளான இன்று (04) காலை பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இறுதிப் போட்டி நடைபெற்றது. 

இதில் அண்மைக்காலமாக கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்ற வட மாகாணத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர்.

இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலின் தேசிய சம்பியனான அனித்தா ஜெகதீஸ்வரன், சுமார் ஒரு வருடகால இடைவெளிக்குப் பிறகு தேசிய மட்டப் போட்டியொன்றில் களமிறங்கியிருந்தார். 

எனினும், உபாதை முழுமையாக குணமடையாத நிலையில் இந்தப் போட்டியில் பங்குபற்றிய அவர், 3.33 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார். 

போட்டியின் பிறகு அனித்தா எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், உபாதை காரணமாக கடந்த ஒரு வருடங்ளாக எந்தவொரு போட்டியிலும் நான் களமிறங்கவில்லை. இதனால் உரிய முறையில் பயிற்சிகளை முன்னெடுக்க முடியாமல் போனது. எதுஎவ்வாறாயினும், உபாதைக்கு மத்தியிலும் போட்டியிட்டு 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. 

அதேபோல, உபாதையிலிருந்து விரைவில் குணமடைந்த பிறகு ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டமாக எதிர்பார்க்கின்ற 3.80 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு முயற்சி செய்வேன் என அவர் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை அனித்தா முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டிப் பிரிவில் யாழ் பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி என்.டக்சிதா 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய கனிஷ்ட சம்பியனான இவர், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இந்த நிலையில், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனித்தாவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து வெற்றியீட்டி வருகின்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சச்சினி பெரேரா 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

எனினும், குறித்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட டக்சிதாவும் இதே அளவு உயரத்தைத் தாவினாலும், சச்சினி பெரேரா அந்த உயரத்தை இரண்டாவது முயற்சியில் தாவியதால் அவருக்கு முதலிடம் வழங்கப்பட்டது. 

இதேவேளை, இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மற்றுமொரு வட மாகாண வீராங்கனையான யாழ். மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகர் ஹெரீனா 3.10 மீற்றர் உயரத்தைத் தாவி 6ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<