ரோஹித்தின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என புகழும் கோஹ்லி

232
Getty

நாங்கள் இந்தப் போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். இந்தப் போட்டியையும், ஆடுகளத்தின் தன்மையையும் பார்த்தால் இதுவொரு சவாலான போட்டி என்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள். எனவே, இது எமக்குக் கிடைத்த தொழில்முறை வெற்றியாகும் என இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி தென்னாபிரிக்க அணியுடனான வெற்றி குறித்து தெரிவித்தார்.

ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி

உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய இந்திய ………….

அதேபோல, முதல் போட்டியிலேயே நிறைய அழுத்தங்களுடன் விளையாடி சதமடித்த ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த கோஹ்லி, இதுதான் ரோஹித்தின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் எனவும் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண கிரிக்கெட்டில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான 8ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதம் அடிக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 227 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா 122 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த நிலையில், இந்திய அணியின் முதலாவது வெற்றி குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தஅணித் தலைவர் விராத் கோஹ்லி,

நீண்ட நாட்கள் காத்திருந்து இவ்வாறானதொரு சவாலான போட்டியொன்றில் விளையாடி வெற்றி பெற்றது என்பது இத்தொடர் முழுவதும் எமக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுக்கும். நாங்கள் இப்போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். நீங்கள் இந்தப் போட்டியையும், ஆடுகளத்தின் தன்மையையும் பார்த்தால் இதுவொரு சவாலான போட்டி என்பதை நன்கு அறிய முடியும். உண்மையில் அனைத்து பாராட்டுகளும் ரோஹித் சர்மாவையே சாரும். உண்மையில் இதுவொரு தொழில்முறை வெற்றியாகும்.

இந்தப் போட்டிதான் ரோஹித்தின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என நான் கருதுகிறேன். உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியிலேயே நிறைய அழுத்தங்களுடன் விளையாடி சதம் குவிப்பதென்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அதிக பௌண்சர்களை கொண்ட இவ்வாறான ஆடுகளங்களில் பொறுமையாக விளையாடி ஓட்டங்களைக் குவிப்பதென்பது இலகுவான விடயமல்ல. எனவே, தனது அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி முதல் போட்டியிலேயே நேர்த்தியான முறையில் விளையாடி சதமடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.

எனவே, ஒரு அணியாக நாங்கள் நம்பிக்கையுடன் களமிறங்கி பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் மிகவும் கவனத்துடன் விளையாடினோம். அதன் காரணமாகவே ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை மிகவும் சிறந்தது என சொன்னேன். அதேபோல, கே.எல் ராகுலும் சிறப்பாக விளையாடியிருந்தார். இறுதியில் டோனியும், ஹர்திக் பாண்டியாவும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா, தனது 2ஆவது உலகக் கிண்ண சதத்தையும், 23ஆவது ஒருநாள் சதத்தையும் பூர்த்தி செய்தார். அத்துடன், ஒருநாள் அரங்கில் அதிக சதமடித்த இந்திய வீரர்களில் சௌரவ் கங்குலியை (22), முந்தி 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.  

இதேநேரம், ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் சஹாலின் பந்துவீச்சு குறித்து கோஹ்லி கருத்து தெரிவிக்கையில்,

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்தால் நாங்களும் முதலில் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்ய இருந்தோம். புதிய பந்துடன் இவ்வாறான ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுவது மிகவும் கடினமாகும். தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்தாலும், இந்தப் போட்டியில் குறைந்தளவு ஓட்டங்களையே எதிரணியால் குவிக்க முடிந்தது.

எனினும், ஜஸ்ப்ரிட் வேறுபட்ட முறையில் பந்துவீசியிருந்தார். உண்மையில் அவருடைய பந்தை எதிர்கொள்வதில் துடுப்பாட்ட வீரர்கள் எப்போதும் அழுத்தத்தை எதிர்கொள்வர். சஹால் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். சஹால் ஒருபுறத்தில் விக்கெட்டுக்களை எடுத்தாலும், மறுபுறத்தில் குல்தீப் ஓட்டங்களை வழங்குவதை கட்டுப்படுத்தியிருந்தார்.

நியூசிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது வெற்றி

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் ……

எனவே புதிய பந்துடன் நாங்கள் சிறப்பாக விளையாடியிருந்தோம். அதேபோல எமது சுழல் பந்துவீச்சாளர்கள் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதும், பும்ரா சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

அத்துடன், புவேனஷ்வர் குமாரும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். ஒட்டுமொத்ததத்தில் நாங்கள் விளையாடிய விதம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகக் கிண்ணப் போட்டிகளை வெற்றியுடன் ஆரம்பிப்பது மிகவும் முக்கியம். போட்டியின் முதல் பாதியில் ஓர் அணியாக நாங்கள் களத்தடுப்பில் சிறப்பாக செயல்பட்டோம். அதே உத்வேகத்துடன் போட்டியை நிறைவுசெய்து வெற்றி பெற்றோம் என கோஹ்லி குறிப்பிட்டார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<