NSL ஒருநாள் தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது தம்புள்ள அணி

National Super League Limited Over Tournament 2024

94
National Super League Limited Over Tournament 2024

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 3ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், கண்டி அணியை 19 ஓட்டங்களால் வீழ்த்தி மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணி சம்பியனாக முடிசூடியது.

இதன்மூலம் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக தம்புள்ள அணி தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடரின் சம்பியனாக தெரிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (10) நடைபெற்ற இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ஓட்;டங்களைக் குவித்தது.

அந்த அணியின் துடுப்பாட்டத்தில் பவன் ரத்னாயக்க சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களை எடுத்தார். List A போட்டிகளில் அவரது அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.

மறுபுறத்தில் சனோத் தர்ஷிக (73) மற்றும் மினோத் பானுக (69) ஆகிய இருவரும் அரைச் சதமடித்து வலுச்சேர்த்தனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் புலின தரங்க 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 333 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி பலத்த போட்டியை கொடுத்த போதிருலும், 45.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 313 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

காலி அணிசார்பில் அதிகபட்சமாக கமில் மிஷார 94 ஓட்டங்களையும், லஹிரு உதார 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, தம்புள்ள அணியின் பந்துவீச்சில் பொருத்தவரை அயன சிறிவர்தன மற்றும் துஷான் ஹேமன்த ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதமும், மொஹமட் சிராஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எனவே கண்டி அணிக்கு எதிராக 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய தம்புள்ள அணி, இந்த ஆண்டு தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது.

இந்த நிலையில், தேசிய சுபர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சம்பியனாகிய தம்புள்ள அணிக்கு 2 மில்லியன் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பிடித்த காலி அணிக்கு ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

விருதுகள்

தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் – லஹிரு குமார (தம்புள்ள அணி)

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – ஷெஹான் பெர்னாண்டோ (காலி அணி)

தொடர் ஆட்டநாயகன் – ஜனித் லியனகே (ஜப்னா அணி)

ஆட்டநாயகன் (இறுதிப்போட்டி) – பவன் ரத்னாயக்க (தம்புள்ள அணி)

போட்டியின் சுருக்கம்

தம்புள்ள அணி – 332/4 (50) – மினோத் பானுக 69, லசித் க்ருஸ்புள்ளே 36, சனோஜ் தர்ஷிக 73, பவன் ரத்நாயக்க 118*, அயன சிறிவர்தன 21, புலின தரங்க 2/68

கண்டி அணி – 313/10 (45.3) – லஹிரு உதார 86, கமில் மிஷார 94, தீக்ஷிலா டி சில்வா 19, வனுஜ சஹன் 44*, மொஹமட் சிராஸ் 2/42, துஷான் ஹேமந்த 3/63, அயன சிறிவர்தன 3/58

முடிவு – தம்புள்ள அணி 19 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<