கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணம் லிவர்பூல் அணி வசம்

412

புத்தளம் நகர சபையின் அனுசரணையுடன், புத்தளம் உதைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கே. ஏ. பாயிஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் நஸ்ரியின் ஹெட்ரிக் கோலால்  எருக்கலம்பிட்டி உதைபந்தாட்ட கழகத்தை 3-1 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்திய புத்தளம் லிவர்பூல் உதைப்பந்தாட்ட கழகம் தொடரின் சம்பியன் கிணண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரான மறைந்த கே.ஏ. பாயிஸ் அவர்களின் நினைவாக ஏற்பாடு செய்திருந்த இந்த தொடரில் புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கம் வகிக்கும் 12 கழகங்கள் பங்கேற்றிருந்தன.

இதற்கமைய 12 கழகங்களும் ஒரு குழுவில் 3 அணிகள் வீதம் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் ஆட்டமாக இடம்பெற்றது. லீக் சுற்று முடிவில் குழு நிலையில் முதலிடம் பிடித்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

அந்த வகையில், முதல் அரையிறுதிப் போட்டியில் குழு A இல் முதலிடம் பிடித்த அல் அஷ்ரக் கழகத்தை, குழு B இல் முதலிடம் பிடித்த லிவர்பூல் கழகம் 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் குழு C இல் முதலிடம் பிடித்த எருக்கலம்பிட்டி உதைபந்தாட்ட கழக அணி குழு D இல் முதலிடம் பிடித்த நியூ ப்ரண்ட்ஸ் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இதற்கமைய புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற தீர்மானம் மிக்க இறுதி ஆட்டம் பெருந்திரளான ஆதரவாளர்கள் புரை சூழ வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு கழக வீரர்களும் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பந்து இரு கழக வீரர்களின் கால்களிலும் சம வீதத்தில் இருந்தது.  பின்னர் ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரரான ஆஷிக் கொடுத்த இலகு கோலுக்கான பந்துப் பரிமாற்றத்தை பெற்ற முன்கள வீரரான நஸ்ரி பந்தை நேராக எதிரணி கோல் காப்பாளரின் கைகளுக்குள் கொடுக்க இலகுவான வாய்ப்பு வீணானது.

பின்னர் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் எருக்கலம்பிட்டி கழகத்திற்கு கிடைத்த கோணர் கிக் வாய்ப்பை முஸ்பிக் கோல் கம்பம் நோக்கி அடிக்க கம்பத்திற்கு மேலால் பந்து வெளியேறியது. தொடர்ந்த ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் லிவர்பூல் கழகத்திற்கு கிடைத்த பிரீ கிக் உதையை பட்லான் கம்பம் நோக்கி அடிக்க மிகச் சிறப்பாக செயற்பட்ட எருக்கலம்பிட்டி கோல் காப்பாளரான அபாஸ் உயரே எழுந்து பந்தை கையால் கம்பத்துக்கு மேலால் தட்டி விட லிவர்பூலின் கோலுக்கான முயற்சி வீணானது.

மேலும் இரு கழக வீரர்களும் தொடராக கோலுக்கான முயற்சியில் ஈடுபட்ட போதிலும் முதல் பாதி ஆட்டம் முடிவில் இரு கழகத்தினாலும் கோல்களை உட்செலுத்த முடியாமல் போdது.

முதல் பாதிலிவர்பூல் 0 : 0 எருக்கலம்பிட்டி

பின்னர் ஆரம்பமான இரண்டாம் பாதி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே லிவர்பூல் வீரர்களின் ஆட்டத்தில் வேகம் இருந்து. இதற்கமைய போட்டியின் 50ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ஆஷிக் கம்பம் நோக்கி அடித்த பந்தை கோல் காப்பாளர் நழுவ விட அதனை பெற்றுக்கொண்ட லிவர்பூல் நட்சத்திர முன்கள வீரரான நஸ்ரி கம்பத்தினுள் பந்தை உட்செலுத்தி முதல் கோலை பதிவு செய்தார்.

முதல் கோல் அதிர்ச்சியில் இருந்து எருக்கலம்பிட்டி கழகம் மீள்வதற்குள் ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் பந்துடன் எருக்கலம்பிட்டி கோல் பிரதேசத்தினுள் நுழைந்த நஸ்ரி கோல்காப்பாளரை கடந்து அசத்தலாக பந்தை கம்பத்தினுல் அனுப்பி வைக்க 2-0 என தமது முன்னிலையை வழுப்படுத்தியது லிவர்பூல்.

தொடர்ந்த ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் ரஸ்வான் கொடுத்த இலகு கோலுக்கான பந்துப் பரிமாற்றத்தை பெற்ற நஸ்ரி மிக இலாபகமாக பந்தை கம்பத்தினுல் செலுத்தி தனது ஹெட்ரிக் கோலை பதிவு செய்ததுடன் தனது கழகத்தை 3:0 என வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார்.

பின்னர் போட்டியின் 87 ஆவது நிமிடத்தில் வைத்து   பாஸிலின் பந்துக் கடத்தலினை பெற்ற அஸ்கான், அதனை கோலாக மாற்ற ஆறுதல் கோலை பதிவு செய்தது எருக்கலம்பிட்டி கழகம்.

உபாதையீடு நேரத்தில் இரு கழக வீரர்களும் கோலுக்கான முயற்சியில் ஈடுபட்ட போதிலும் அவர்களால் மேலதீக கோல்களை உட்செலுத்த முடியாமல் போக நடுவர் கியால் போட்டி நிறைவு பெற்றதாய் அறிவிக்க தீர்மானிக்க இறுதிப் போட்டியில் 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் எருக்கலம்பிட்டி கழகத்தை வீழ்த்திய லிவர்பூல் கழகம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி அசத்தியது.

இறுதியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட எருக்கலம்பிட்டி கழக வீரர்களுக்கான பக்கங்களையும், கிண்ணத்தையும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரான ஜஸ்வர் உமர் வழங்கி வைத்ததுடன், சம்பியனான லிவர்பூல் கழக வீரர்களுக்கான பக்கங்களையும் கிண்ணத்தையும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா வழங்கி வைத்தார். மேலும், இறுதிப் போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை ஹெட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்த நஸ்ரிக்கு புத்தளம் நகர பிதா ரபீக் அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<