ஏழ்மையை வென்று கால்பந்தில் சாதிக்க துடிக்கும் முஷ்பிக்

421
Football Sri Lanka

இலங்கையில் உள்ள திறமையான கால்பந்து வீரர்களை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடர் அண்மையில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.  

இதில் சபரகமுவ மாகாண கால்பந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் மொஹமட் முஷ்பிக், அதிக கோல்கள் அடித்த (6 கோல்கள்) வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில், இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இற்கு முஷ்பிக் வழங்கிய நேர்காணலின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

இதுபோன்ற போட்டியில் நான் விளையாடுவது இதுவே முதல் முறை. முதல் போட்டியிலேயே இவ்வளவு திறமையை வெளிப்படுத்த முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் போட்டித் தொடருக்கான மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனாலும் எனது அந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. எனவே, கால்பந்து விளையாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று கூறினார்.

20 வயதாகும் முஷ்பிக், சமீப காலமாக கால்பந்து விளையாடி வருகிறார். எஹலியகொட அல்-அக்ஷா கல்லூரியில் கல்வி பயின்ற அவர், தனது பாடசாலை காலத்தில் ஒரு மெய்வல்லுனராக குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் சிறந்து விளங்கினார். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் சிறந்து விளங்கிய அவர், வலயப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற போதிலும் எதிலும் பங்கேற்கவில்லை.

என்னுடைய ஆசைக்காகவே பாடசாலைக் காலத்தில் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றினேன். ஆனால் அதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல விருப்பம் இருக்கவில்லை. கற்றுக் கொடுக்க யாரும் இருக்கவில்லை. ஓடுவதற்கு காலணிகள் இல்லை. இதனால் தான் நான் வலய மட்டப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அந்தப் போட்டிகளில் பங்பெறச் செய்வதற்கு எனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னை அழைத்துச் செல்ல வருவார்கள். ஆனால் ஏதாவது சொல்லி அந்தப் போட்டிகளில் பங்குபற்றுவதை தவிர்ப்பேன்.’

இதில் சிறப்பம்சம் என்னவெனில் பாடசாலையில் நடைபெறுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மாத்திரம் தான் முஷ்பிக் பங்கேற்றுள்ளார். அதைத் தாண்டி முஷ்பிக் அதைப் பற்றி ஒன்றும் பேசுவதில்லை. வலய மட்டப் போட்டிகளிலும் யாராவது கட்டாயப்படுத்தினால் மட்டுமே அவர் பங்கேற்பாரே தவிர அவருக்கு விருப்பம் இருக்கவில்லை.

முஷ்பிக்கின் குடும்பத்தின் பொருளாதார நிலையும் இதற்கு பிரதான காரணமாக இருக்கலாம். முஷ்பிக்குக்கு ஒரு மூத்த சகோதரர் மற்றும் சகோதரி மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். குறிப்பாக, பெற்றோரால் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதையும், அவரின் பெற்றோருக்கு நிரந்தர வேலை இருக்காது என்பதையும் முஷ்பிக் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

சாதாரண தரம் வரை கஷ்டப்பட்டு படித்தேன். அதன்பிறகு வேலை தேடினேன். அந்த நேரத்தில்தான் நான் கால்பந்து விளையாடினேன். உனக்கு நன்றாக கால்பந்து விளையாடலாம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். எனவே அதை விட்டுவிடாதீர்கள் என்று அடிக்கடி சொல்வார்கள்.’

முஷ்பிக்கின் அப்பாவும் ஒரு கால்பந்து வீரர். முஷ்பிக்கின் அப்பா, அவரது சொந்த ஊரான சிலாபத்தில் பல கால்பந்து அணிகளுக்காக விளையாடிவர். ஆனால் சிலாபத்திலிருந்து எஹலியகொடவுக்கு வந்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் கால்பந்து விளையாட்டை தொடர முடியாமல் போனது.

‘எனது அப்பா கால்பந்து விளையாடியுள்ளார் என்பதை கேள்விப்பட்டுள்ளேன். அதனாலோ என்ன எனக்கும் கால்பந்து விளையாட்டின் மீது ஆசை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நான் சுமார் இரண்டு ஆண்டுகள் விளையாடினேன். யாரும் எனக்கு கால்பந்து விளையாட்டை கற்றுக் கொடுக்கவில்லை. அப்பா கூட என்னை இப்படி விளையாட சொன்னதில்லை. இதற்கிடையில் நான் எஹலியகொட யுனைடெட் என்ற அணிக்காக விளையாடினேன். அதன்பிறகு நான் இரத்தினபுரிக்கு வந்தேன்.’

முஷ்பிக்கிடம் மறைந்திருந்த கால்பந்து திறமைகள் இரத்தினபுரியில் வெளிப்பட்டன.

இரத்தினபுரிக்கு வந்த பிறகு முதலில் வணிக என்ற ஆசிரியர் என்னிடம் பேசினார். அவரிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். சாதாரணமாக பந்தை தள்ளிவிட்டால் போதும் என நினைத்து விளையாடிய எனக்கு கால்பந்து விளையாட்டின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்தவர் தான் வணிக ஆசிரியர். அதன்பிறகு துனில் ஆசிரியர் மற்றும் பசுல் ரகுமான் ஆசிரியர் எனக்கு நிறைய உதவி செய்தார்கள். மேலும் என்னுடன் விளையாடிய அனைவரும் என் பின்னால் இருந்தனர். அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது

முஷ்பிக்கிடம் காணப்பட்ட அந்த திறமையை இம்முறை சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் சப்ரகமுவ மாகாண அணிக்கு வெளிப்படுத்தினார். குறித்த போட்டித் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய சபரகமுவ மாகாண அணி, தென் மாகாணத்திடம் பெனால்டி உதையில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடியிருந்தால் அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அரை இறுதிப்போட்டி வரை வர முடிந்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்‘ என்று முஷ்பிக் தெரிவித்தார்.

இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள திறமையான கால்பந்து வீரர்களை கண்டறியும் நோக்கில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட சுதந்திர கிண்ண கால்பந்து தொடரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த வீரர் தான் முஷ்பிக். ஆனால், தற்போது தான் இக்கட்டான நிலையில் இருப்பதாக எமக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

கால்பந்து தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். ஆனால் வீட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் எனது சகோதரர் கத்தாருக்கு சென்றார். அண்ணா தான் தற்;போது வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நானும் பாடசாலைக் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு Auto Mobile கற்கை நெறியை படித்தேன். என்றாவது ஒருநாள் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவேன் என நம்புகிறேன். ஆனால் தொடர்ந்து கால்பந்து விளையாடினால் நன்றாக இருக்கும்

முஷ்பிக் போன்ற திறமையான வீரர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்களின் வாழ்வில் வரும் தடைகளை சமாளிப்பது எளிதல்ல. முஷ்பிக் இன்றும் அதேபோன்றதொரு நிலையை எதிர்கொண்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டில் முன்னேற முடியும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக கடுமையாக உழைக்கிறேன். என்றாவது ஒருநாள் தேசிய அணிக்காக விளையாட காத்திருக்கிறேன். அந்த ஆசை நிறைவேறவில்லை என்றால் வெளிநாடு சென்றுவிடுவேன்’ என்று தனது தலை விதி இப்படித்தான் இருக்கும் என்று முஷ்பிக் சொல்கிறார்.

நான் இங்கு வருவதற்கு கடினமாக உழைத்தேன். மேலும் பலர் எனக்கு உதவினர். எனக்கு கால்பந்து விளையாட்டை கற்று கொடுத்த வனிக ஆசிரியர், துனில் ஆசிரியர், பசுல் ரகுமான் ஆசிரியர் ஆகியோர் ஆற்றிய சேவை விலைமதிப்பற்றது. மேலும் நான் விளையாடும் அனைவருமே எனது பயணத்திற்கு பெரும் பலம். எனது பயணம் பெரும் பலமாக இருந்ததால் அவர்கள் அனைவரையும் போலவே எனது குடும்பத்தினரும் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அடிக்கடி எனக்கு உதவி செய்யும் ஹபீல் மற்றும் மொஹமட் அவுன் ஆகிய 2 நண்பர்களையும் நன்றியுடன் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்‘ என்று முஷ்பிகுர் கூறினார்.

இந்தத் தொடரின் மூலம் முஷ்பிக்கைப் போன்ற பல திறமையான வீரர்களை எம்மால் அடையாளம் காணக்கூடியதாக இருந்திருக்கும். அவர்கள் கால்பந்து மைதானத்தில் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றும் பொளருளாதார நிலைமை என்பன இருண்டதாகவே இருக்கும். அவர்களுக்கு அந்தப் பிரச்சனை இருக்கும் வரை நாம் எதிர்;பார்க்கின்ற ‘திறமை’ வெளியில் வராது.

இதுபோன்ற விடயங்களை கண்டறிந்து தீர்வு காண வேண்டியது அதிகாரிகளின் கடமை. அப்போதுதான் மொஹமட் முஷ்பிக் போன்ற திறமையான வீரர்களை பாதுகாக்க முடியும்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<