இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே கனிஷ்ட அணிகள் பங்குபெற்றும், முக்கோண ஒரு நாள் தொடரின் இன்றைய போட்டியில், துடுப்பாட்டம், பந்து வீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு ஜிம்பாப்வே கனிஷ்ட அணியினை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை கனிஷ்ட அணி இத்தொடரில் தனது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

பார்ல் நகர, போலண்ட் மைதானத்தில், ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கனிஷ்ட அணியின் தலைவரான அவிஷ்க பெர்னாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை ஜிம்பாப்வே அணிக்கு வழங்கினார்.

இதனால், நேற்றைய இந்த முக்கோணத் தொடரின் போட்டியில் தென்னாபிரிக்க கனிஷ்ட அணியினை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி அதே உற்சாகத்துடன் தனது துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தது. நிதானமான ஆரம்பம் ஒன்றினை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே கனிஷ்ட அணியின் முதல் விக்கெட் அவ்வணி 28 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், பி.டி.எஸ் குலரத்ன கல்லூரியின் வலது கை சுழல் பந்து வீச்சாளரான நிப்புன் ரன்சிக்கவின் பந்து வீச்சில் பறிபோனது. இதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கிரேகொரி டொல்லர் 9 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி சென்றார்

பின்னர், மந்த கதியிலேயே ஓட்டங்கள் குவிக்க ஆரம்பித்த ஜிம்பாப்வே கனிஷ்ட அணியின், விக்கெட்டுகளை இலங்கை கனிஷ்ட அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் பதம் பார்க்க, ஒரு கட்டத்தில் அவ்வணி 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

எனினும், ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டேனியல் ஸ்விட்சேய், டியோன் மசவிட்ஸாவின் ஓரளவு சிறப்பான இணைப்பாட்டம் (44) மற்றும் பின்வரிசை வீரரான லியம் ரொச்சேயின், பெறுமதிமிக்க அதிரடி ஓட்டங்கள் என்பவற்றின் துணையுடன் ஜிம்பாப்வே கனிஷ்ட அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், ஜிம்பாப்வே கனிஷ்ட அணியிக்காக மூன்று வீரர்கள் மாத்திரமே முப்பது ஓட்டங்களினை தாண்டியிருந்தனர். அதில் அதிகபட்சமாக டேனியல் ஸ்விட்ஸேய் 34 ஓட்டங்களை பெற்றதுடன், இறுதி வீரர்களில் ஒருவராக துடுப்பாடிய ஜிம்பாப்வே கனிஷ்ட அணியின் 17 வயதேயான லியாம் ரொச்சே 19 பந்துகளில் ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகள் உள்ளடங்களாக 32 ஓட்டங்களை பெற்றுத்தந்தார்.

பந்து வீச்சில், இலங்கை கனிஷ்ட அணியிக்காக, ஜிம்பாப்வே கனிஷ்ட அணியினை ஓட்டங்கள் பெறுவதில் சிக்கலுக்கு உள்ளாக்கிய சுழல் பந்து வீச்சாளர்களான ரஷ்மிக்க தில்ஷான், நிப்புன் ரன்சிக்க, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் வெற்றி இலக்காக, நிர்ணயம் செய்யப்பட்ட 193 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்காக, மைதானம் நோக்கி விரைந்த இலங்கை கனிஷ்ட அணி, 33 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 194 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது. இதற்கு உதவியாக இருந்த இலங்கை அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரரான விஷ்வ சத்துரங்க 94 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 90 ஓட்டங்களை விளாசியதோடு, இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்து 48 ஓட்டங்களை பெற்று இலங்கை கனிஷ்ட அணியின் இந்த வெற்றிக்கு பங்காற்றியிருந்தார்.

பந்து வீச்சில், டேனியல் மசவிட்ஸா மற்றும் லியாம் ரொச்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை ஜிம்பாப்வே அணியிக்காக கைப்பற்றியிருந்தனர்.

இத்தொடரில், அடுத்ததாக நாளை (20) இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை கனிஷ்ட அணியும் தென்னாபிரிக்க கனிஷ்ட அணியும் மோதிக்கொள்கின்றன.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே கனிஷ்ட அணி: 192/9 (50) – டேனியல் ஸ்விட்ஸேய் 34(81), லியாம் ரொச்சே 32(19), தனுனுர்வா மக்கோனி 30(58), ரஷ்மிக்க தில்ஷான் 25/2 (7), கமிந்து மெண்டிஸ் 23/2 (6), நிப்புன் ரன்சிக்க 51/2(9)

இலங்கை கனிஷ்ட அணி: 194/3 (33) – விஷ்வ சத்துரங்க 90(94), அவிஷ்க பெர்னாந்து 48(53), லியாம் ரொச்சே 30/1(9)

போட்டி முடிவு – இலங்கை கனிஷ்ட அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி