செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை

422

இன்று (30) நடைபெற்று முடிந்திருக்கும் செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்திருக்கும் இலங்கை அணி, செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக வென்று வரலாறு படைத்துள்ளது.

சர்வதேச செவிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் வாரியம் (Deaf-ICC) ஒழுங்கு செய்திருந்த இந்த T20 உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவின் குருக்ரம் நகரில் நடைபெற்றிருந்தது.

>> துடுப்பாட்டத்தில் பிரகாசித்த குசல் மெண்டிஸ் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை உட்பட இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நேபாளம், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா என எட்டு அணிகள் பங்குபற்றியிருந்தன.

இலங்கை இத்தொடரின் குழுநிலைப் போட்டிகளில் தமது முதலாவது மோதலில் அவுஸ்திரேலியாவை 65 ஓட்டங்களால் தோற்கடித்திருந்ததுடன், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவினால் 13 ஓட்டங்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

தென்னாபிரிக்காவுடன் மாத்திரமே தோல்வியடைந்த இலங்கை அணி தமது  அடுத்த குழுநிலைப் போட்டியில் நேபாளத்தினை 179 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினை பதிவு செய்தது.

இதனை அடுத்து இலங்கை தமது இறுதி குழுநிலைப் போட்டியில் இந்தியாவை 51 ஓட்டங்களால் தோற்கடித்து செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தின் “சுபர் 3” சுற்றுக்கு முன்னேறியது.

“சுபர் 3” சுற்று போட்டிகளில் இந்தியாவை 6 விக்கெட்டுக்களால் தோற்கடித்த இலங்கை தென்னாபிரிக்காவையும் 3 விக்கெட்டுக்களால் தோற்கடித்து செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாட தெரிவாகியது.

பின்னர் இறுதிப் போட்டியில் இந்தியாவை 36 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவை மூன்றாவது தடவையாக தோற்கடித்து சம்பியன் பட்டத்தினை வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<