தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் இன்று ஆரம்பம்

57
Junior National Championship starts today
 

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று (09) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை (12) நடைபெறவுள்ளது.

இருபாலாருக்குமாக 4 வயதுப் பிரிவுகளில் நடைபெறவுள்ள இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என நாடு முழுவதிலும் இருந்து 3,000க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

16 வயதின்கீழ், 18 வயதின்கீழ், 20 வயதின்கீழ், 23 வயதின்கீழ் நான்கு வயது பிரிவுகளில் மொத்தம் 124 இறுதிப் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளன. இதில் போட்டிகளின் முதல் நாளான இன்று 21 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போன 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த ஆண்டு 23 வயதுக்குட்டவர்களுக்கு போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<