தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் மே மாதம் கொழும்பில்

35
Junior Athletic Championship
 

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் திறமையான கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களை இனங்காணும் நோக்கில் நடத்தப்படுகின்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவில்லை. எனினும், நாட்டில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்காக 16 வயதின்கீழ், 18 வயதின்கீழ், 20 வயதின்கீழ் மற்றும் 23 வயதின்கீழ் ஆகிய வயதுப் பிரவுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதில் 2007 முதல் 2008 வரையான காலப்பகுதியில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் 16 வயதின்கீழ் பிரிவிலும், 2005 முதல் 2006 வரையான காலப்பகுதியில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் 18 வயதின்கீழ் பிரிவிலும், 2003 முதல் 2004 வரையான காலப்பகுதியில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் 20 வயதின்கீழ் பிரிவிலும், 2000 முதல் 2002 வரையான காலப்பகுதியில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் 23 வயதின்கீழ் பிரிவிலும் போட்டியிட முடியும்.

அதேபோல, ஒவ்வொரு வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற போட்டி நிகழ்ச்சிகளுக்கான அடைவுமட்டங்களும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இம்முறை தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்ற விரும்புகின்ற வீரர்கள் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, விண்ணப்பப்படிவத்துடன், வீரர்கள் தங்களது பிறப்புச் சான்றிதழையும், தேசிய அடையாள அட்டையின் நிழற்படத்தையும் அனுப்பி வைக்கும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<