யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்ளேனத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள ஜப்னா வொலிபோல் லீக் (Jaffna Volleyball League) வியாழக்கிழைமை (02) ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை கரப்பந்தாட்ட வரலாற்றில் ஏல முறையில் நடைபெறும் ஒரேயொரு கரப்பந்தாட்ட லீக் தொடரான ஜப்னா வொலிபோல் லீக் மார்ச் 2ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
டயலொக் வலைப்பந்து சம்பியானகியது HNB அணி
தொடரின் முதல் பருவகால போட்டிகள் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாவது பருவகால போட்டிகள் இந்த ஆண்டு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை தொடரில் 9 அணிகள் மோதவுள்ளதுடன், முதல் போட்டியில் நடப்பு சம்பியனான அரியாலை கில்லாடிகள் 100 மற்றும் ஆவாரங்கால் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத்தொடர்ந்து அதே தினத்தில் சங்கானை செலஞ்சர்ஸ் மற்றும் ரைசிங் ஐலண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த அணிகளுடன் வல்வையூர் வொலி வொரியர்ஸ், மட்டுவில் ஸ்பைக்கர்ஸ், நீர்வை பசங்க, யுனிவர்சல் ஸ்டார்ஸ் புத்தூர் மற்றும் சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி ஆகிய அணிகள் தொடரில் பங்கேற்கின்றன.
தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிளும் தலா 12 வீரர்களை கொண்டிருக்க முடியும். அத்துடன், அதில் 2 வீரர்கள் 20 வயதுக்குட்பட்ட வீரர்களாகவும், லிபரோ வீரர் ஒருவரும் அணியில் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். இதில் 20 வயதுக்குட்பட்ட ஒரு வீரர் அணியின் போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாகும்.
தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் அனுசரணை வழங்கும் டயலொக்
அணிகளை தெரிவுசெய்வதற்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றுமுடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு அணிக்கும் தலா 10,000 புள்ளிகள் வழங்கப்பட்டன. குறித்த 10,000 புள்ளிகளின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த தொகைக்குள் அணிகள் வீரர்களை ஏலத்தில் எடுக்கமுடியும். அதுமாத்திரமின்றி ஏலத்துக்கு முன்னர் 2 வீரர்களை தக்கவைப்பதற்கான வாய்ப்பினை ஏற்பாட்டுக்குழு அணிகளுக்கு வழங்கியிருந்தது.
தொடரை பொருத்தவரை 10 வெவ்வேறு மைதானங்கில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆரம்பத்தில் லீக் சுற்றாக போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், மொத்தமாக 36 லீக் போட்டிகளும், பின்னர் 4 பிளே-ஓஃப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இம்முறை நடைபெறவுள்ள ஜப்னா வொலிபோல் லீக் தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ரவிவர்மன் அருமைக்கிளி, “இம்முறை JVL தொடர் யாழ் மாவட்டம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. JVL ஆரம்பித்த பின்னர் யாழ். மாவட்டத்தில் கரப்பந்தாட்டம் சற்று வளர்ச்சியை காட்டியுள்ளது. வீரர்கள் ஆர்வம் காட்டுவதுடன், கழகங்களும் அதிகரிக்கின்றன. போட்டிகள் அதிகரிக்கின்றன.
குறிப்பாக, பாடசாலைகளுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்ட தொடரில் தேசிய ரீதியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 2வது இடத்தை பிடித்துக்கொண்டது. அதுமாத்திரமின்றி புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி தேசிய ரீதியிலான ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட தொடரில் 4வது இடத்தை பிடித்துக்கொண்டது.
எம்மை பொருத்தவரையில் இவை மிகப்பெரிய முன்னேற்றங்களாகும். அடுத்தடுத்த வருடங்களில் நாம் தொடரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல எதிர்பார்க்கிறோம். அடுத்த வருடம் நாட்டின் எந்தவொரு மூளையிலிருந்தும் 2 வீரர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறோம். இந்த ஆண்டு அனுசரணையாளர்கள் சரியாக கிடைக்காத போதும், கரப்பந்தாட்டத்தின் வளர்ச்சியினை கருதி யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் தொடரை ஏற்பாடு செய்துள்ளது” என்றார்.
அதேநேரம், இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள ஜப்னா வொலிபோல் லீக் தொடருக்கு ஜேர்மனியில் உள்ள “அட்சயா இண்டர்நெசனல்” பிரதான அனுசரணையை இரண்டாவது ஆண்டும் தொடர்ச்சியாக வழங்குவதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்டார் பூட் ஸ்டோர்ஸ் நிறுவனம் இணை அனுசரணையாளர்களாக இணைந்துள்ளனர்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<