டயலொக் வலைப்பந்து சம்பியானகியது HNB அணி

80
Dialog Senior Netball Championship

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட டயலொக் கிண்ண சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) அணி சம்பியனாக மகுடம் சூடியது.

இதன்மூலம் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக ஹட்டன் நெஷனல் வங்கி அணி டயலொக் கிண்ண சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட சம்பியன் பட்டத்தை சுவீகரித்து அசத்தியது.

நாடு முழுவதிலும் இருந்து 35 அணிகள் பங்குகொண்ட இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஹட்டன் நெஷனல் வங்கி அணி, இலங்கை விமானப்படை அணியை சந்தித்தது.

கொழும்பு டொறிங்டன் சதுக்க மைதானத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் 2 ஆட்ட நேர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய ஹட்டன் நெஷனல் வங்கி 44 – 29 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று சம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.

இறுதிப் போட்டியின் முதல் கால் பகுதியை 17 – 9 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்ட ஹட்டன் நெஷனல் வங்கி, 2ஆவது கால் பகுதியையும் 10 – 2 என தனதாக்கி இடைவேளையின்போது 28 – 11 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிய போதிலும், ஹட்டன் நெஷனல் வங்கி அணி 44 – 29 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தக்கவைகத்துக்கொண்டது.

இம்முறை சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட தொடருக்காக வழங்கப்பட்ட விசேட விருதுகள் அனைத்தையும் ஹட்டன் நெஷனல் வங்கி அணி வீராங்கனைகள் வென்றெடுத்தது மற்றொரு சிறப்பம்சமாகும்.

சிறந்த மத்திய கள வீராங்கனையாக கயஞ்சலி அமரவன்சவும் சிறந்த கோல் போடும் வீராங்கனையாக உமங்கா டி சொய்சாவும், சிறந்த கோல் தடுப்பு வீராங்கனையாக மல்மி ஹெட்டிஆராச்சியும் வலைபந்தாட்ட இராணியாக கயனி திசாநாயக்கவும் தெரிவாகினர்.

இதேவேளை, இறுதிப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற போட்டியில் இராணுவப்படை 66 – 52 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கடற்படை அணி வெற்றிகொண்டு 3ஆம் இடத்தைப் பிடித்தது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<