முழுமையான பலத்தினை வெளிப்படுத்த காத்திருக்கும் ஜப்னா ஸ்டாலியன்ஸ்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

1145

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 (LPL) தொடர் நாளை (26) ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்த தொடரில் ஆடும் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் காணப்படுகின்றது.

இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இந்த LPL தொடரில் சகலதுறை வீரர் திசர பெரேரா மூலம் வழிநடாத்தப்படுகின்றது.

LPL அழுத்தத்தினை உள்வாங்க தயாராகும் தம்புள்ள வைகிங்

இதேநேரம், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்களாக பிரித்தானிய-இங்கிலாந்து தொழிலதிபர் ப்ரின்டன் பகிரதன் மற்றும் கனடா நாட்டு தொழிலதிபர் ராகுல் சூட் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், கடைசியாக 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற SLPL தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஊவா நெக்ஸ்ட் அணியின் தலைவருமான திலின கண்டம்பி உள்ளார். அத்துடன், அணியின் ஆலோசகர்களில் ஒருவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் ஹேமங் பதானியும் இருக்கின்றதார்.

இதற்கு மேலதிகமாக, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக மரியோ வில்லவராயனும், சுழற்பந்து பயிற்சியாளராக சசித் பத்திரனவும், களத்தடுப்பு பயிற்சியாளராக விமுக்தி தேசப்பிரியவும் காணப்படுகின்றனர்.

அணிக்குழாம்

துடுப்பாட்ட வீரர்கள் – அவிஷ்க பெர்னாந்து, ஜோன்சன் சார்ள்ஸ், சொஹைப் மலிக், டொம் மூர்ஸ், மினோத் பானுக்க, சரித் அசலன்க, நுவனிது பெர்னாந்து

சகலதுறை வீரர்கள் – திசர பெரேரா, வனிந்து ஹஸரங்க, தனன்ஞய டி சில்வா, தெய்வேந்திரம் டினோஷன்

சுழல் பந்துவீச்சாளர்கள் – சத்துரங்க டி சில்வா, மகேஷ் தீக்ஷன, ப்ரபாத் ஜயசூரிய, விஜயகாந்த் வியாஸ்காந்த்

வேகப் பந்துவீச்சாளர்கள் – உஸ்மான் சின்வாரி, சுரங்க லக்மால், பினுர பெர்னாந்து, கைல் எப்போட், டுஆன்னே ஒலிவர், கனகரட்னம் கபில்ராஜ், செபஸ்டியன்பிள்ளே விஜயராஜ்

சர்வதேச T20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் டாவிட் மாலனை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்திருந்த போதும் அவருக்கு இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் காரணமாக LPL தொடரில் ஆட முடியாமல் போனது. ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு இது பாரிய இழப்பு என்ற போதும் அவ்வணி அதனைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய நிலையில் இல்லை.

அனுபவம் குறைந்த வீரர்களுடன் கன்னி LPL தொடரில் கண்டி டஸ்கர்ஸ்

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் துடுப்பாட்டத் துறையினை நோக்கும் போது இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான அவிஷ்க பெர்னாந்து, மினோத் பானுக்க போன்றவர்களும், பாகிஸ்தானின் சொஹைப் மலிக்கும் இருப்பது மிகப் பெரிய பலமாகும். இதேநேரம், மத்திய வரிசையில் அதிரடி ஆட்டம் காண்பிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜோன்சன் சார்ள்ஸ், விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் டொம் மூர்ஸ் மற்றும் சரித் அசலன்க ஆகியோரும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த சகலதுறை வீரர்கள் எனக் கருதக்கூடிய அணித்தலைவர் திசர பெரேரா, வனிந்து ஹஸரங்க மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகிய மூவரும் ஜப்னா ஸ்டாலியன்ஸின் குழாத்தில் காணப்படுவது அவ்வணிக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மறுமுனையில் அனுபவம் கொண்ட சுரங்க லக்மால் தென்னாபிரிக்க அணியின் டுஆன்னே ஒலிவர், கைல் எப்போட் ஆகியோருடன் சேர்த்து பாகிஸ்தானின் வேகப்புயல் உஸ்மான் சின்வாரி ஆகியோர் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வேகத்துறைக்கு பங்களிப்பு செய்ய காத்திருக்கின்றனர்.

அதோடு, சுழல் பந்துவீச்சாளர்களான சத்துரங்க டி சில்வா, ப்ராபத் ஜயசூரிய ஆகியோருக்கு ஜப்னா ஸ்டாலியன்ஸின் முதல் பதினொருவர் அணியில் இடம்பிடிக்க பலத்த போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் தவிர, யாழ்ப்பாணத்தின் மணிக்கட்டு சுழல்வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இள நட்சத்திரமாக இந்த தொடரில் அசத்த எதிர்பார்க்கப்படுகிறார்.

எதிர்பார்ப்பு வீரர்களை நோக்கும் போது எல்லோர் பார்வையும் அணியின் முன்னணி சகலதுறை வீரர்களான வனிந்து ஹஸரங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் மீதே இருக்கின்றது. இதில் வனிந்து ஹஸரங்க துடுப்பாட்டத்திலேயே இம்முறை அதிக கவனம் செலுத்துவார் என கணிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களோடு, இளம் துடுப்பாட்ட நட்சத்திரமான அவிஷ்க பெர்னாந்துவும் எதிர்பார்க்கப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக காணப்படுகின்றார்.

இதுவரை சர்வதேச அறிமுகம் எதுவும் பெறாத சரித் அசலன்க, கனகரட்னம் கபில்ராஜ், செபஸ்டியன்பிள்ளே விஜயராஜ் மற்றும் தெய்வேந்திரம் டினோஷன் போன்ற வீரர்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் கிடைத்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாகும்.

இறுதியாக நோக்கும் போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜொலித்துவருகின்ற பல முன்னணி வீரர்களை உள்ளடக்கியிருக்கும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, இந்த LPL தொடரில் பல அணிகளுக்கு நெருக்கடிதர தயாராகியிருக்கின்றது என்பதே உண்மையாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<