இலங்கை விளையாட்டுத்துறையில் 2022இல் நடந்தவை

Sri Lanka's Sports Review - 2022

310

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் முழு உலகிற்கும் பாரிய அச்சுறுத்தலையும், அழிவையும் ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றினால் விளையாட்டுத்துறையானது பாரிய பின்னடைவை சந்தித்தது. இது உலக விளையாட்டைப் போல இலங்கையின் விளையாட்டிலும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது என்றால் மிகையாகாது.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைவடைய தொடங்கிய நாள் முதல் தடைப்பட்ட அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளும் மெல்ல மெல்ல ஆரம்பமாகின. ஆனாலும், இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்த 2021ஐப் போல 2022இலும் விளையாட்டு நிகழ்ச்சிகள் பெரிதளவில் இடம்பெறவில்லை என்றே கூறலாம்.

இதற்கு முக்கிய காரணமாக நாட்டில் கடந்த மே மாதம் ஏற்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள், ஆட்சி மாற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக விளையாட்டு நிகழ்ச்சிகளை திட்டமிட்டவாறு நடத்துவதற்கு முடியாமல் போனது.

எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டானது உலக அரங்கைப் போல, இலங்கைக்கும் விளையாட்டுத்துறையில் ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்தது. அதில் சில மறக்கமுடியாத தருணங்கள் மற்றும் வரலாற்று சாதனைகள் பதிவாகின.

பானுக ராஜபக்ஷவின் திடீர் ஓய்வு, தெற்காசியாவின் மின்னல் வேக வீரராக மகுடம் சூடிய யுபுன் அபேகோன், மாலைதீவுகளில் வைத்து அகால மரணமடைந்த இலங்கை கால்பந்து அணி வீரர் டக்சன் பியூஸ்லஸ், இந்தியாவை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முத்தமிட்ட இலங்கை கிரிக்கெட் அணி, ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாக மகுடம் சூடிய இலங்கை அணி, பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று வரலாறு படைத்த யுபுன் அபேகோன், அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவரை பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க மற்றும் 3ஆவது தடவையாக வெற்றிகரமாக நடைபெற்ற LPL தொடர் உள்ளிட்ட விடயங்கள் முக்கிய இடம் பிடித்தன.

ஆகவே, 2022இல் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய தருணங்களையும் இந்த சிறப்புக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஜனவரி

*  தனிப்பட்ட காரணங்களுக்காகவும், குடும்ப நலனைக் கருத்திற்கொண்டும் ஜனவரி முற்பகுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவை மீளப் பெற்றுக் கொண்டார்.

* இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச அரை மரதன் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

* இலங்கை கபடி சம்மேளனம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்த மாவட்ட ரீதியிலான தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்ட அணியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

* இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

* இலங்கையின் அங்குரார்ப்பண சுபர் லீக் கால்பந்து தொடரில் களுத்துறை புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாக மகுடம் சூடியது.

* இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர்களில் ஒருவரான டில்ருவன் பெரேரா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

பெப்ரவரி

* சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையின் ஸ்ரீமாலி சமரகோன், இந்திக திஸாநாயக்க மற்றும் சதுரங்க லக்மால் ஆகிய வீரர்கள் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

* 2022 IPL தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்கவை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

* இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான சுரங்க லக்மால் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

* இலங்கை தேசிய கால்பந்து அணியின் பின்கள வீரரும், மாலைதீவுகளின் திவகி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் கிளப் வெலன்சியா அணிக்காக விளையாடி வந்த டக்சன் பியூஸ்லஸ், மாலைதீவுகளில் வைத்து அகால மரணமடைந்தார்.

மார்ச்

* தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் இராணுவப் படையைச் சேர்ந்த சச்சினி பெரேரா, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.70 மீட்டர் உயரம் தாவி புதிய இலங்கை சாதனை படைத்தார்.

* பங்களாதேஷில் நடைபெற்ற பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் லீக் சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.

* இலங்கையின் உயரம் பாய்தல் சாதனைக்கு சொந்தக்காரராகத் திகழும் உஷான் திவங்க பெரேரா, அமெரிக்காவின் பல்கலைக்கழக உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டு விழாவின் இரண்டாவது அத்தியாயத்தில் வெற்றியீட்டி உயரம் பாய்தல் சம்பியனாக மகுடம் சூடினார்.

* 2022 மாலைதீவு விளையாட்டு விருது வழங்கும் விழாவில் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ (Sports Icon) விருது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய மற்றும் இலங்கையின் நட்சத்திர வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் ஆகிய இருவருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

* இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் தென் மாகாணத்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட வட மாகாண அணி தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது.

* இந்தியாவின் கொஹீமாவில் நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.

ஏப்ரல்

* பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தேசிய சம்பியனான கௌஷல்யா மதுஷானி தற்கொலை செய்து கொண்டார்.

* இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்தினைச் சேர்ந்த கிறிஸ் சில்வர்வூட்டும், உதவிப் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரரான நவீட் நவாஸும் நியமிக்கப்பட்டனர்.

* மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பினால் அமைக்கப்பட்ட, கிழக்கு மாகாணத்தின் முதலாவது புற்தரை கிரிக்கெட் மைதானம் திறந்து வைக்கப்பட்டது.

மே

* இத்தாலியில் நடைபெற்ற 12ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 20.37 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகைளை முறியடித்தார்.

* ஜேர்மனியின் டெஸாவு நகரில் நடைபெற்ற 2022 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.06 செக்கன்களில் நிறைவு செய்து தனது சொந்த தெற்காசிய சாதனையையும், இலங்கை சாதனையையும் முறியடித்தார்.

* இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உறுப்புரிமையை ஆசிய ரக்பி சம்மேளனம் இடைநிறுத்துவதாக அறிவித்தது.

* இலங்கை ஆடவர் கால்பந்து அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக அண்ட்ரூ மொர்ரிஸனும், உதவிப் பயிற்றுவிப்பாளராக கெய்த் ஸ்டீவன்ஸும் நியமிக்கப்பட்டனர்.

ஜூன்

* இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற 61ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டம் மற்றும் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

* உஸ்பகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் மூன்றாம் சுற்றில் பங்குகொண்ட இலங்கை அணி, உஸ்பகிஸ்தான், தாய்லாந்து மற்றும் மாலைதீவுகள் ஆகிய 3 அணிகளுடனும் தோல்வியைத் தழுவி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

ஜுலை

* உலக மெய்வல்லுனர் சங்கத்தின் கண்டங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் தொடரில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், போட்டித் தூரத்தை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றதுடன், ஆண்டுகளுக்கான 100 மீட்டரில் தனது சொந்த தெற்காசிய சாதனையையும், இலங்கை சாதனையையும் முறியடித்தார்.

* பாகிஸ்தானில் நடைபெற்ற 3ஆவது சவாட் சர்வதேச குத்துசண்டைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்கப் பதக்கம் வென்றார்.

ஆகஸ்ட்

* இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில்  ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இசுரு டிலங்க குமார வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கான முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

* பொதுநலவாய விளையாட்டு விழா ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், சுவட்டு நிகழ்ச்சிகளில் பதக்கம் வென்ற நான்காவது இலங்கை வீரராக யுபுன் அபேகோன் சாதனை படைத்தார்.

* பெண்களுக்கான 57 கிலோகிராம் எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி பொருதொடகே, பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் மல்யுத்தப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த வீரராக சாதனை படைத்தார்.

* பொதுநலவாய விளையாட்டு விழா மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பரிதி வட்டம் எறிதல் T42 பிரிவு போட்டியில் பங்கேற்ற பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

* 2022ஆம் ஆண்டு டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 4ஆம் குழுவில் சம்பியனாகிய இலங்கை அணி, 2023 ஆசிய பசுபிக் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் 3ஆம் குழுவின் கீழ் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுக் கொண்டது.

* தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான ஹிமாஷ ஏஷானுக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

* தேசிய விளையாட்டு பேரவையின் புதிய தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டார்.

* 2022ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ப்ரோ கபடி லீக் தொடரின் ஒன்பதாவது பருவகாலத்திற்கான போட்டிகளில், பெங்கால் வோரியர்ஸ் அணிக்காக இலங்கை வீரர் அஸ்லம் சஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

செப்டம்பர்

*தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான கடைசி மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனர் வீரர் அருந்தவராசா புவிதரன், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 5.15 மீட்டர் உயரம் தாவி இலங்கை சாதனை படைத்தார்.

* சிங்கபூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் சிங்கபூர் அணியை 63-43 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி 6 ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

* குவைத்தின் கய்ஃபான் மெய்வல்லுனர் விளையாட்டரங்கில் நடைபெற்ற 4ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணி 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

* இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் மாத்தறை சிடி கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

* இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 6வது தடவையாக ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்தது.

* ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கிண்ண சம்பியனாக தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி மகுடம் சூடியது.

ஒக்டோபர்

மலேசியாவில் நடைபெற்ற 8ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இலங்கை சார்பில் போட்டியிட்ட முன்னாள் உலக கெரம் சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீட் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கதை சுவீகரித்தனர்.

நவம்பர்

* அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்னவுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடையும், 5000 அமெரிக்க டொலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

* இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022/23 பருவகாலத்துக்கான முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் பிரீமியர் லீக் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிரிக்கெட் கழகம் சம்பியனாக மகுடம் சூடியது.

* அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் போது சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக்கவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தடை விதிக்கப்பட்டார்.

* தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய எழுவர் றக்பி தொடரின் 2ஆவது கட்டத்தில் ஸ்ரீநாத் சூரியபண்டார தலைமையிலான இலங்கை அணி 4ஆவது இடத்தைப் பிடித்தது.

டிசம்பர்

* பங்களாதேஷில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட மத்திய ஆசிய கரப்பந்தாட்டப் போட்டியில் நேபாள அணியை 3–2 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றது.

* இலங்கை கபடி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இளையோர் கபடி சம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் யாழ். மாவட்ட அணியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

இலங்கை கிரிக்கெட் சபையினால் 3ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடரில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி சம்பியனாக மகுடம் சூடியது.

* பங்களாதேஷின் நடைபெற்ற மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க மகளிர் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி சம்பியனானது.

* தாய்லாந்தில் நடைபெற்ற பதின்மூன்றாவது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 175 கிலோ எடைப் பிரிவில் இலங்கை வீரர் ஹர்ஷ் டி. பீரிஸ் தங்கப் பதக்கம் வென்று உலக சம்பியனாக தெரிவானார்.

* அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்ற ஆஸி லீக் T20 தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மஹேல உடவத்த தலைமையிலான இலங்கை அணி சம்பியாகத் தெரிவாகியது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<