வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சிங்கர் நிறுவன அனுசரணையில் நடக்கும் பிரிவு A இன் முதல் சுற்றுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றன. இன்றைய தினத்தில் மொத்தமாக 5 போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிச்செல்லா எதிர் டிமோ

MCA மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் மாஸ் ஹோல்டிங்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யுனிச்செல்லா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிச்செல்லா அணி, மழை காராணமாக ஆட்டம் இடை நிறுத்தப்படும் வரை 47 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக ரமித் ரம்புக்வெல்ல 62 ஓட்டங்களையும், திலகரத்ன தில்ஷான் 49 ஓட்டங்களையும், TN சம்பத் 28 ஓட்டங்களையும் பெற்றதோடு  திலக்ஷ சுமணசிறி 59 ஓட்டங்களையும் சதுரங்க டி சில்வா 28 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

அணி சார்பாக பந்து வீச்சில் ரமேஷ் மென்டிஸ் 42 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மழை காரணமாக தடைப்பட்ட போட்டி டக்வத் லூயிஸ் விதிக்கமைய திருத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி டிமோ அணிக்கு 27 ஓவர்களில் 203 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கமைய துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய டிமோ அணி மாஸ் ஹோல்டிங்ஸ் அணியின் சுழலில் சிக்கி 24.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. டிமோ அணி சார்பில் துடுப்பாட்டத்தில் நிபுன் கருணாநாயக்க 45 ஓட்டங்களையும் ரமேஷ் மென்டிஸ் 34 ஓட்டங்களையும் ஹஷான் துமிந்து 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் மாஸ் ஹோல்டிங்ஸ் அணி சார்பில் இஷார மென்டிஸ் 35 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும், தில்ருவன் பெரேரா மற்றும் ஷெஹான் மதுஷங்க தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிச்செல்லா – 269/5 (47) ரமித் ரம்புக்வெல்ல 62, திலக்ஷ சுமணசிறி 59*, திலகரத்ன டில்ஷான் 49, டி என் சம்பத் 28, சதுரங்க டி சில்வா 28*, ரமேஷ் மென்டிஸ் 3/42

டீமோ – 161 (24.4) – நிபுன் கருணாநாயக்க 45, ரமேஷ் மென்டிஸ் 34, ஹஷான் துமிந்து 22, திக்சில டி சில்வா 21,  இஷார அமரசிங்ஹ 4/35, தில்ருவான் பெரேரா  2/32

முடிவு – மாஸ் ஹோல்டிங்ஸ் யுனிச்செல்லா 41 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறை) 

ஹேய்லிஸ் PLC (A) எதிர் LB பினான்ஸ் (A)

கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் LB பினான்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலகு வெற்றியை சுவீகரித்த DHT, மாஸ் சிலுயேட்டா அணிகள்

பெயார் என்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) இன் அனுசரணையோடு இடம்பெறும்..

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற LB பினான்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை ஹேய்லிஸ் அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களம் இறங்கிய ஹேய்லிஸ் அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் சசித்திர சேரசிங்ஹ 89 ஓட்டங்களையும் அண்டி சொலமன் 34 ஓட்டங்களையும் பெற்றனர். LB பினான்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷிரான் பெர்னாண்டோ 51 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. இதனால் டக்வத் லூயிஸ் விதிப்படி 25 ஓவர்களில் 141 ஓட்டங்கள் LB பினான்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதற்கமைய துடுப்பெடுத்தாடிய LB பினான்ஸ் அணி ஷெஹான் ஜயசூரிய (54) பெற்ற அரைச் சதத்தின் உதவியுடன் 21.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பந்து வீச்சில் ஹேய்லிஸ் அணி சார்பில் அலி கான் 23 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் லசித் எம்புல்தெனிய 21 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

ஹேய்லிஸ் PLC (A) – 206 (48.4) – சசித்ர சேரசிங்ஹ 89, அண்டி சொலொமன் 34, ஷிரான் பெர்னாண்டோ 4/51

LB பினான்ஸ் (A) – 141/5 (21.5) – ஷெஹான் ஜயசூரிய 54, அலி கான் 2/23, லசித் எம்புல்தெனிய 2/21

முடிவுLB பினான்ஸ் (A) 5 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறை)

ஹட்டன் நஷனல் வங்கி எதிர் கொமர்சல் கிரெடிட்

மொறட்டுவை டி சொய்சா மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் கொமர்சல் கிரெடிட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹட்டன் நஷனல் வங்கி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஹட்டன் நஷனல் வங்கி அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக மாதவ வர்னபுர 71 ஓட்டங்களையும் கோசல குலசேகர 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கொமர்சல் கிரெடிட் அணி சார்பாக இமேஷ் உதயங்க 14 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் அசித பெர்னாண்டோ 40 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட டக்வத் லூயிஸ் முறைப்படி 47 ஓவர்களில் 201 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு கொமர்சல் கிரெடிட் அணிக்கு வழங்கப்பட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய கொமர்சல் கிரெடிட் அணி வனிந்து ஹசரங்க பெற்ற 85 ஓட்டங்களின் உதவியுடனும் டில்ஹான் குரே ஆட்டமிழக்காது பெற்ற 44 ஓட்டங்களின் உதவியுடனும் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பந்து வீச்சில் ஹட்டன் நஷனல் வங்கி சார்பில் விமுக்தி பெரேரா 22 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சஜீவ வீரக்கோன் 39 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நஷனல் வங்கி – 205/7 (50) – மாதவ வர்ணபுர 71, கோசல குலசேகர 45, இமேஷ் உதயங்க 2/14, அசித பெர்னாண்டோ 2/40

கொமர்சல் கிரெடிட் – 203/5 (45.3) – வனிந்து ஹசரங்க 85, டில்ஹான் குரே 44*, விமுக்தி பெரேரா 2/22, சஜீவ வீரகோன் 2/39

முடிவு கொமர்சல் கிரெடிட் 5 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறை)

சம்பத் வங்கி எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (A)

P சரா ஓவல் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் ஜோன் கீல்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சம்பத் வங்கி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய சம்பத் வங்கி அணி மழை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்படும் வரை 46.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணி துடுப்பாட்டத்தில் சார்பாக கௌஷால் சில்வா 63 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும் ஹசந்த பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையை வீழ்த்த விஷேட உத்திகளுடன் இந்தியா களமிறங்கியதா ?

இந்திய அணி தமது அண்டை நாடான இலங்கைக்கு கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து..

பந்துவீச்சில் ஜோன் கீல்ஸ் அணி சார்பாக சமிகார எதிரிசிங்க்ஹ 32 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் மதுஷான் ரவிசந்த்ரகுமார் 45 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மழை காரணமாக பாதிக்கப்பட்ட இப்போட்டி டக்வத் லூயிஸ் முறையில் திருத்தியமைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணிக்கு 25 ஓவர்களில் 155 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி துடுப்பாடக் களம் இறங்கிய ஜோன் கீல்ஸ் அணி லஹிரு மிலந்த பெற்ற 86 ஓட்டங்களின் உதவியுடன் 21 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சம்பத் வங்கி சார்பில் ஜீவன் மென்டிஸ் 35 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 198/7 (46.2) – கௌஷால் சில்வா 63, அவிஷ்க பெர்னாண்டோ 39, ஹசந்த பெர்னாண்டோ 32*, சமிகார எதிரிசிங்ஹ 2/32, மதுஷான் ரவிச்சந்த்ரகுமார் 3/45

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (A) – 156/6 (21) – லஹிரு மிலந்த 86, ஜீவன் மென்டிஸ் 3/35

முடிவு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 4 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறை)

சாமர சில்வாவுக்கு 2 வருடகால போட்டித் தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு சகல..

கான்றிச் பினான்ஸ் எதிர் டீஜே லங்கா PLC

கட்டுநாயக்க சுதந்திர வரத்தக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் டீஜே லங்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கான்றிச் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய கான்றிச் அணி டீஜே லங்கா அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. கான்றிச் பினான்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கசுன் விதுர 44 ஓட்டங்களைப் பெற்றார். டீஜே லங்கா அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜெப்ரி வண்டர்சே 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் .

149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய டீஜே லங்கா அணி மினோத் பானுக்க ஆட்டமிழக்காது பெற்ற 60 ஓட்டங்களுடன் 33.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது. பந்து வீச்சில் கான்றிச் பினான்ஸ் அணி சார்பாக அலங்கார அசங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

கான்றிச் பினான்ஸ் – 148/10 (49.2) – கசுன் விதுர 44, ஜெப்ரி வண்டேர்சே 5/26

டீஜே லங்கா PLC – 151/4 (33.1) – மினோத் பாணுக்க 60*, அலங்கார அசங்க 2/36

முடிவு டீஜே லங்கா 6 விக்கெட்டுகளால் வெற்றி