LPL அழுத்தத்தினை உள்வாங்க தயாராகும் தம்புள்ள வைகிங்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

233
Team Dambulla Viiking
 

ஜேர்மனிய வரலாற்றுக் கதைகளில் வரும் கடவுள்களில் ஒருவராக ”தோர் (Thor)” உள்ளார். இந்த தோரின் புதல்வன் (Son of Thor) என செல்லப் பெயருடன் தங்களை அழைக்கும் தம்புள்ள வைகிங், அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் ஆடும் ஐந்து அணிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.

>> அனுபவம் குறைந்த வீரர்களுடன் கன்னி LPL தொடரில் கண்டி டஸ்கர்ஸ்

இலங்கையின் பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான தம்புள்ளை நகரினை பிரதிநிதித்துவம் செய்கின்ற தம்புள்ள வைகிங், இந்தியாவின் பொலிவூட் நடிகரான சச்சின் ஜே. ஜோசி மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒவைஸ் ஷாஹ் காணப்பட, இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சமில கமகே வேகப்பந்து பயிற்சியாளராக காணப்படுகின்றார். 

 அணிக்குழாம் 

துடுப்பாட்டவீரர்கள் – நிரோஷன் டிக்வெல்ல, ஒசத பெர்னாந்து, உபுல் தரங்க, அஞ்சலோ பெரேரா, போல் ஸ்டெர்லிங், அசேன் பண்டார

சகலதுறைவீரர்கள் – தசுன் ஷானக்க, லஹிரு மதுசங்க, ரமேஷ் மெண்டிஸ், சமிட் பட்டேல், சமியுல்லா சென்வாரி

சுழல் பந்துவீச்சாளர்கள் – புலின தரங்க, மலிந்த புஷ்பகுமார, கவிந்து நதீஷான், சசிந்து கொலம்பகே 

வேகப் பந்துவீச்சாளர்கள் – லஹிரு குமார, கசுன் ராஜித, அன்வர் அலி, சுதீப் தியாகி, அப்டாட் ஆலம், டில்சான் மதுசங்க

தம்புள்ள வைகிங் அணியின் வெற்றிக்கு என சூத்திரம் ஒன்றினை தயாரித்தால் குறித்த சூத்திரத்தை உருவாக்குவதில் தசுன் ஷானக்கவின் சகலதுறை ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஷானக்க தவிர விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் நிரோஷன் டிக்வெல்ல, அனுபவ ஆரம்பத் துடுப்பாட்டவீரர் உபுல் தரங்க, ஒசத பெர்னாந்து போன்ற வீரர்கள் தம்புள்ளை வைகிங் அணியின் துடுப்பாட்டப் பலமாக காணப்படுகின்றனர்.  

LPL தொடரில் ஆடும் ஏனைய அணிகளுடன் ஒப்பிடும் போது தம்புள்ள வைகிங் அணியில் பெயர் குறிப்பிடும் வெளிநாட்டு நட்சத்திரங்கள் பெரிதாக இல்லாத போதும் அதனை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ஏனெனில், உலகின் பல்வேறு T20 லீக் தொடர்களில் ஆடிய இங்கிலாந்தின் முன்னாள் சகலதுறைவீரர் சமிட் பட்டேல், அயர்லாந்து அணியின் போல் ஸ்டெர்லிங் போன்றோர் தம்புள்ளை வைகிங் அணிக்கு கிடைத்திருக்கின்றனர்.

தம்புள்ளை வைகிங் அணியின் பந்துவீச்சுத் துறையினை நோக்கும் போது பாகிஸ்தானின் அன்வர் அலி, இந்தியாவின் சுதிப் தியாகி ஆப்கானின் அப்தப் ஆலாம் போன்றவர்கள் வெளிநாட்டில் இருந்து வருவிக்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளராக இருக்கின்றனர். மறுமுனையில், உள்ளூர் நட்சத்திரங்களான லஹிரு குமார, கசுன் ராஜித போன்றோரின் வேகப் பங்களிப்பும் தம்புள்ள வைகிங் அணிக்கு கிடைக்கவுள்ளது.  

>> LPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல – மாலிங்க

தம்புள்ள வைகிங் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களினை நோக்கும் போது அவ்வணிக்கு இலங்கையின் உள்ளூர் சுழல் ஜாம்பவான் மலிந்த புஷ்பகுமாரவின் சேவை கிடைக்க காத்திருக்கின்றது. இதேநேரம் சர்வதேச அறிமுகம் பெறாத புலின தரங்க, சசிந்து கொலம்பகே மற்றும் கவிந்து நதீஷான் ஆகிய இளம் வீரர்களுக்கும் தங்களின் சுழலால் என்ன செய்ய முடியும் என்பதனை காட்டுவதற்கான ஒரு வாய்ப்பும் காணப்படுகின்றது. 

இந்த வீரர்கள் தவிர இலங்கையின் தென்னாபிரிக்க டெஸ்ட் குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் 20 வயது நிரம்பிய வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்கவும் தம்புள்ள வைகிங் அணியில் பிரகாசிக்க எதிர்பார்க்கப்படும் மற்றைய வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றார். 

இதேநேரம், தம்புள்ளை வைகிங் அணியின் தலைவராக இந்த LPL தொடரில், தசுன் ஷானக்க செயற்பாடுவார் என்பது தற்போது உறுதி செய்யப்பபட்டிருக்கின்றது. எனவே, LPL அழுத்தங்களை உள்வாங்க தயாராகியிருக்கும்  தம்புள்ள வைகிங் அணி தமது முதல் போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (28) கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்ககொள்கின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<