சாதனையுடன் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி

173
courtsey - Getty Images

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (20) நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி 88 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என ஒருநாள் தொடரில் பங்களாதேஷை வைட் வொஷ் செய்துள்ளது.

கப்டிலின் சதத்துடன் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி

நியூசிலாந்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ்…

நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்த நியூஸிலாந்து அணி இப்போட்டியில் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையில் டொம் லதம் இன்றைய போட்டியில் அணியை தலைமை தாங்கி வழிநடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூஸிலாந்து அணி,  மத்திய வரிசை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் இப்போட்டியில் 29 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். எனினும் ஹென்ரி நிக்கலோஸ், ரொஸ் டெய்லர் மற்றும் லதம் ஆகியோர் அரைச்சதங்களை தாண்டியிருந்ததுடன் இறுதி நேரத்தில் ஜேம்ஸ் நீசம் மற்றும் கிரன்ட்ஹோம் ஆகியோர் தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தியிருந்தனர்.

இப்போட்டியில் 69 ஓட்டங்களை பெற்ற நியூஸிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியிருந்ததுடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையையும் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் அவ்வணியின் ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் ஸ்டீஃபன் பிளமிங் இன் சாதனையை முறியடித்திருந்தார் என்பது விஷேட அம்சமாகும். அவர் சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து  ஓய்வு பெறும் போது 8,007 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய ரொஸ் டெய்லர்

நியூசிலாந்து அணியின் அனுபவ மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர்…

வெற்றிக்கு 331 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி, தமது முதல் மூன்று விக்கெட்டுகளையும் வெறும் இரண்டு ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறியது. ஒரு சந்தர்ப்பத்தில் 61 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்ககப்பட்ட போதும் அவ்வணி வீரர் ஷபிர் ரஹ்மான் போராடி பெற்ற தனது கன்னி சதத்தின் உதவியுடன் 242 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷபிர் ரஹ்மான் 102 ஓட்டங்களை பெற்று இறுதி விக்கெட்டுக்காக ஆட்டமிழந்ததுடன் மொஹமட் சபியுட்டீன் 44 ஓட்டங்களையம் பெற்றுக் கொடுத்திருந்தார். பந்துவீச்சில் டிம் சௌத்தி 6 விக்கெட்டுகளை சாய்த்திருந்ததுடன் போல்ட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

போராட்ட வெற்றிக்கு பின், புதிய வரலாற்று சாதனையை எதிர்பார்த்துள்ள இலங்கை

வறட்சியான நிலம் ஒன்றில் நீண்ட காலத்திற்கு பின்னர் மழை பொழிந்தால்…

போட்டியின் ஆட்ட நாயகனாக டிம் சௌத்தி தெரிவாகியதுடன் தொடர் நாயகனாக மார்டின் கப்டில் தெரிவானார். ஒரு நாள் தொடரை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

நியூஸிலாந்து அணி – 330/6 (50) – டைய்லர் 69, நிக்கலோஸ் 64, லதம் 59, முஸ்தபிசுர் ரஹ்மான் 93/2

பங்களாதேஷ் அணி – 242 (47.2) – ஷபிர் ரஹ்மான் 102, சபியுட்டீன் 44, சௌத்தி 65/6, போல்ட் 37/2

முடிவு : நியூஸிலாந்து அணி 88 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளுக்கு