சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இசுரு உதான திடீர் ஓய்வு

446
 

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்லி டி சில்வாவுக்கு கடிதமொன்றை அனுப்பி தனது ஓய்வு தொடர்பான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடன் அமுலாகும் வகையில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இசுரு உதானவின் ஓய்வு பற்றி இலங்கை கிரிக்கெட் சபை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது

அதில், இலங்கை அணியில் அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் தற்போது வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள இசுரு உதான, இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட கிடைத்ததைத் பெருமையாகவும், கௌரவமாகவும் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் பெறுமதிவாய்ந்த வீரர்களில் ஒருவராக வலம்வந்த இசுரு உதானவின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது

இந்திய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிய இசுரு உதான, 2ஆவது T20 போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது உபாதைக்குள்ளாகினார்.

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் திடீரென விலகிய பென் ஸ்டோக்ஸ்

இதன்காரணமாக இந்தியாவுடனான 3ஆவது T20 போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.  

எதுஎவ்வாறாயினும், இந்தியாவுடனான தொடரில் இசுரு உதானவால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனமை இங்கு கவனிக்கத்தக்கது.

33 வயதான இசுரு உதான 2009ஆம் ஆண்டு T20 போட்டிகளில் அறிமுகமானதுடன், 2012ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும் இலங்கைக்காக அறிமுகத்தை மேற்கொண்டார்.

சுமார் 12 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டில் விளையாடி வரும் இசுரு உதான, 35 T20 போட்டிகளிலும், 21 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, எதிர்வரும்  ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் T20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில், திசர பெரேராவின் ஓய்வுக்குப் பிறகு இசுரு உதானவும் ஓய்வு பெற்றிருப்பது இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுக்கும் என சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<