இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி ஒத்திவைப்பு

968
 

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெறவிருந்த மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கைக்கு முதல் வெற்றி

2022ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கவிருக்கின்ற எஞ்சிய 3 அணிகளையும் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவருகின்றன.

எட்டு நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் குழு  A இல் இடம்பெற்ற இலங்கை மகளிர் அணி, தமது முதல் போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக இலகு வெற்றியினைப் பதிவு செய்த நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தமது அடுத்த போட்டியில்  மேற்கிந்திய தீவுகளை இன்று (27) ஹராரே நகரில் வைத்து எதிர்கொள்வதாக இருந்தது.

எனினும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் காணப்பட்ட ஆறு வீராங்கனைகளுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 11 பேர் மாத்திரமே இன்றைய போட்டிக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தகுதியான நிலையில் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் கொவிட்-19 வைரஸ் அச்சத்தினை அடுத்து ஹராரே மைதானத்திற்குள் விளையாட வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டே இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மகளிர் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

ஓமானில் நடைபெறவுள்ள புதிய லெஜண்ட்ஸ் தொடர்

இதேவேளை தென்னாபிரிக்காவில் புதிய கொவிட்-19 வைரஸ் இனம் ஒன்று கண்டறியப்பட்டதனை அடுத்து அது பரவுகின்ற அச்சம் ஜிம்பாப்வேயிலும் காணப்படுகின்றது. இதனால், அங்கே நடைபெறுகின்ற மகளிர் உலகக் கிண்ணத் தொடரும், ஒத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுவதோடு, குறித்த மகளிர் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்படும் என நம்பத்தகுந்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<