அதிக ஓட்டங்கள் குவிக்க எதிர்பார்க்கப்படும் இம்முறை புனிதர்களின் சமர்

150

புனிதர்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகள் இடையிலான வருடாந்த கிரிக்கெட் பெரும் போட்டி, 85ஆவது முறையாக இந்த ஆண்டு இடம்பெறவுள்ளது. இம்முறை போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (1) மற்றும் சனிக்கிழமை (2) ஆகிய நாட்களில் கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Photos : St. Peter’s College U19 Cricket Team Preview 2018/19

ThePapare.com | Hiran Weerakkody | 14/02/2019 Editing….

இலங்கையின் முன்னணி பாடசாலைகள் இடையில் நடைபெறும் மிகப் பழமைவாய்ந்த கிரிக்கெட் பெரும் போட்டிகளில் ஒன்றான இந்த புனிதர்கள் சமரின் நடப்புச் சம்பியன்களாக கிண்ணத்தை தக்கவைத்திருக்கும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி உள்ளது. மறுமுனையில், புனித ஜோசப் கல்லூரி இம்முறைக்கான கிரிக்கெட் பெரும் போட்டியில் கிண்ணத்தை வென்று தாம் இழந்த பெருமைகளை பெற்றுக்கொள்ள காத்திருக்கின்றது.

கடந்த கால வரலாறு

இலங்கையின் பிரபல்யம் வாய்ந்த கத்தோலிக்க பாடசாலைகளாக இருக்கும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியும், கொழும்பு பேதுரு கல்லூரி அணியும் இந்த புனிதர்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியினை அருட்தந்தை மோரிஸ் லே கொக் கிண்ணத்திற்காக 1933ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகின்றன. அருட்தந்தை மோரிஸ் லே கொக் அவர்கள் இரண்டு பாடசாலைகளினதும் தலைமை ஆசிரியராக கடமையாற்றியதன் காரணமாகவே அவர் பெயரில் புனிதர்கள் சமருக்கான வெற்றிக் கிண்ணம் பெயரிடப்பட்டிருக்கின்றது.

இதுவரையில் விளையாடப்பட்டுள்ள 84 கிரிக்கெட் பெரும் போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி அணி 12 தடவைகள் கிண்ணத்தை வென்றிருப்பதோடு, புனித பேதுரு கல்லூரி அணி 10 தடவைகள் கிண்ணத்தை தமக்கு சொந்தமாக்கியிருக்கின்றது.

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி கிண்ணத்தை கடைசியாக 2008ஆம் ஆண்டு ருவாந்த பெர்னாந்துப்பிள்ளையின் தலைமையில் வென்றதோடு, கொழும்பு பேதுரு கல்லூரி வினு மோஹோட்டியின் தலைமையில் இறுதியாக 2016ஆம் ஆண்டில் கிண்ணத்தை தமதாக்கியிருந்தது.

கௌண்டி கிரிக்கெட்டில் கால் பதிக்கும் திமுத் கருணாரத்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும்….

புனிதர்களின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் இதுவரையில் பெறப்பட்ட அதிக ஓட்டங்களாக 382 ஓட்டங்கள் பதிவாகியிருக்கின்றது. இந்த அதிகூடிய ஓட்டங்களை புனித ஜோசப் கல்லூரி அணி 1982ஆம் ஆண்டில் கேன் சேர்பன்ச்சி தலைமையில் பெற்றது. இதேநேரம், புனித பேதுரு கல்லூரி அணி, இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக 345 ஓட்டங்கள் இருக்கின்றது. இந்த அதிகூடிய ஓட்டங்களை புனித பேதுரு கல்லூரி அணியினர் பெர்சி பெரேராவின் தலைமையில் 1938ஆம் ஆண்டில் பெற்றனர்.

அதேவேளை, இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக்கொண்ட அதிகுறைவான ஓட்டங்களை புனித பேதுரு கல்லூரி அணியினர் 36 ஓட்டங்களுடன் 1972ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் பெரும் போட்டி மூலம் பதிவு செய்ய, புனித ஜோசப் கல்லூரி தமது குறைவான ஓட்டங்களை 1958ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் பெரும் போட்டியில் 56 ஓட்டங்களுடன் பதிவு செய்தனர்.

இதேநேரம், தனிநபராக வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களை புனித பேதுரு கல்லூரி அணியின் கிளைவ் இன்மான் 204 ஓட்டங்களுடன் 1938ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளார், 1997ஆம் ஆண்டில் செனால் வர்ணகுல  புனித ஜோசப் கல்லூரியின் சார்பில் 41 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை கைப்பற்றி இன்னிங்ஸ் ஒன்றுக்கான அதிசிறந்த பந்துவீச்சு பிரதியினை பதிவு செய்திருந்தார்.

புனித ஜோசப் கல்லூரி

புனித ஜோசப் கல்லூரி அணியினர் இந்த ஆண்டிற்கான பாடசாலை கிரிக்கெட் பருவகாலத்தில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியிருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜோசப் கல்லூரியின் பல வீரர்கள் தேசிய அணிக்காக ஆட சென்றுவிட்ட காரணத்தினால் இந்தப் பருவகாலத்தில் புனித ஜோசப் கல்லூரி அணி 2 தோல்விகளுடன் 4 வெற்றிகளை மட்டுமே  பதிவு செய்திருக்கின்றது.

Photos: St.Joseph’s College U19 Cricket Team Preview 2018/19

ThePapare.com | Hiran Chandika | 14/02/2019 Editing and re-using….

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் பெரும் போட்டியில், புனித ஜோசப் கல்லூரி அணியின் தலைவராக, சுழல் வீரரான அஷேன் டேனியல் செயற்படவுள்ளார். பாடசாலை மட்ட கிரிக்கெட்டில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் டேனியல், இளையோர் தேசிய அணிக்கான கடமைகளை பொறுப்பேற்ற காரணத்தினால் இந்தப் பருவகாலத்தில் 24 விக்கெட்டுக்களை மட்டுமே சாய்த்திருக்கின்ற போதிலும், கடந்த பருவகாலத்தில் 70 இற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை தன் பெயரின் கீழ் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், புனித ஜோசப் கல்லூரி அணியின் துணைத் தலைவராக இருக்கும் ஜோஹான்னே டி சில்வா, இந்தப் பருவகாலத்தில் 564 ஓட்டங்களை மட்டுமே குவித்திருக்கின்ற போதிலும், பாடசாலையின் நம்பிக்கை தரும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக உள்ளார். இதேநேரம்  ஜொஹான்னே டி சில்வாவுடன் இந்தப் பருவகாலத்தில் 700 ஓட்டங்களுக்கு மேல் குவித்த தினேத் ஜயக்கொடியும் புனித ஜோசப் கல்லூரி அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட பலமாக இருக்கின்றார்.

மேலும், இந்தப் பருவகாலத்தில் 14.34 என்கிற அட்டகாசமான சராசரியுடன் 76 விக்கெட்டுகளை சாய்த்திருக்கும் இடதுகை சுழல் வீரரான செலிந்தா செனவிரத்ன புனித ஜோசப் கல்லூரிக்கு நம்பிக்கை தரும் பந்துவீச்சு நட்சத்திரமாக இருக்கின்றார்.

புனித ஜோசப் கல்லூரி அணியில் இருக்கும் சகலதுறை வீரர்களான லக்ஷான் கமகே மற்றும் துனித் வெல்லால்கே ஆகியோர் இலங்கை கனிஷ்ட அணியின் இணைந்து விளையாடியதனாலும், காயங்கள் மற்றும் பரீட்சைகள் காரணமாகவும் இந்தப் பருவகாலத்தில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறிய போதிலும் புனிதர்களின் சமரில் ஜொலிப்பார்கள் என நம்பப்படுகின்றது.

இதேநேரம், முதற்தடவையாக புனிதர்களின் சமரில் ஆடும் செரான் பொன்சேக்கா மற்றும் செவோன் டேனியல் ஆகியோரும் புனித ஜோசப் கல்லூரி அணிக்கு பெருமை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் அணி

செரான் பொன்சேக்கா, ஜொஹான்னே டி சில்வா, செவோன் டேனியல், தினேத் ஜயக்கொடி, துனித் வெல்லால்கே, திலேஷ் பெரேரா, சசிந்த மஹிந்தானசிங்கே, லக்ஷான் கமகே, அஷேன் டேனியல் (அணித்தலைவர்), அஷான் டி அல்விஸ், சலிந்த செனவிரத்தன

புனித பேதுரு கல்லூரி

பாடசாலைகளுக்கான இந்தப் பருவகாலத்தில் தோற்கடிக்கப்படாத அணியாக இருந்த புனித பேதுரு கல்லூரி அணி கடந்த வாரம் மஹிந்த கல்லூரி அணியுடனான போட்டியில் மட்டுமே தோல்வியினை தழுவியிருந்தது. இதன்படி, இந்தப் பருவகாலத்தில் பாடசாலை கிரிக்கெட்டில் புனித பேதுரு கல்லூரி அணி மிகவும் வலிமையாக காணப்படுகின்றது.

புனித பேதுரு கல்லூரி அணி இம்முறைக்கான புனிதர்களில் சமரில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான ரன்மித் ஜயசேனவினால் வழிநடாத்தப்படுகின்றது. நான்காவது முறையாக புனிதர்கள் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் பங்கெடுக்கும் ரன்மித் ஜயசேன இந்தப் பருவகாலத்தில் 2 சதங்களுடன் 700 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரன்மித் ஜயசேன ஒருபுறமிருக்க புனித பேதுரு கல்லூரியின் முன்னாள் தலைவரான சந்துஷ் குணத்திலக்கவும், தனது தரப்பிற்கு துடுப்பாட்டத்தில் வலுச்சேர்க்கக்கூடிய ஒருவராக இருக்கின்றார். இந்தப் பருவகாலத்திற்கான பாடசாலை கிரிக்கெட்டில் குணத்திலக்க ஒரு இரட்டைச்சதம் மற்றும் ஆறு சதங்கள், நான்கு அரைச்சதங்கள் என 1,300 இற்கு மேலான ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

ICC யினால் சனத் ஜனசூரியவுக்கு இரண்டு ஆண்டு தடை

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஊழல் தடுப்பு விதி….

அதேவேளை சுழல் ஜோடியான ருவின் செனவிரத்ன, கனிஷ்க மதுவந்த போன்றோரும் புனித பேதுரு கல்லூரிக்காக ஜொலிக்க கூடிய பந்துவீச்சாளர்களாக இருக்கின்றார்கள். இரண்டு வீரர்களும் இந்த பருவகாலத்தில் 100 ஐ அண்மித்த விக்கெட்டுகளை தம்மிடையே பகிர்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் அணி

தினித் அஞ்சுல, பானுக்க டி சில்வா, சந்துஷ் குணத்திலக்க, ரன்மித் ஜயசேன (அணித்தலைவர்), நிப்புனக்க பொன்சேக்கா, சிவான் பெரேரா, சன்னோன் பெர்னாந்து, கனிஷ்க மதுவந்த, வனுஜ சஹான், ருவின் செனவிரத்ன, தாரிக் சபூர்

இறுதியாக..

போட்டி நடைபெறும் கொழும்பு P. சரவணமுத்து  மைதானம் அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட ஒரு இடமாக அண்மைக்காலமாக இருந்து வருகின்றமையால் இம்முறைக்கான போட்டியில் இரண்டு அணிகளும் அதிக ஓட்டங்களை பெற்றுக் கொள்ளும் என நம்பப்படுகின்றது.

இதேநேரம் முடிவு ஒன்றினை எதிர்பார்த்திருப்பதால் இரு அணிகளுக்கும் இன்னிங்ஸ் ஒன்றுக்கு 60 ஓவர்களாக  புனிதர்களின் சமர் கிரிக்கெட் போட்டி மட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன், போட்டி நடைபெறும் இரண்டு நாட்களிலும் மொத்தமாக 210 ஓவர்கள் வீசப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.

விறுவிறுப்பாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை ThePapare.com ஊடாகவும் டயலொக் அலைவரிசை 77 ஊடாகவும், MyTV செயலி ஊடாகவும் கண்டுகளிக்க முடியும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<