தர்ஜினி இல்லாமல் பொட்ஸ்வானா சென்றுள்ள இலங்கை வலைப்பந்து அணி

141
Sri-Lanka Netball tour of Botswana 2019

இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி, முன்னோடிப் பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக கடந்த 20ஆம் திகதி பொட்ஸ்வானா நோக்கி புறப்பட்டுச் சென்றது.  

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட குழாத்தில் தர்ஜினி, எழிலேந்தினி உள்ளடக்கம்

இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் ஜுலை…

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் தொழில்சார் கழகமட்ட வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் விளையாடி வருகின்ற தர்ஜினி சிவலிங்கத்துக்கு அங்கிருந்து பொட்ஸ்வானா செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அவருக்கு குறித்த தொடரில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், பெரும்பாலும் அவர் அடுத்த மாதம் நாடு திரும்பி உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கையில் இடம்பெறவுள்ள பயிற்சிப் போட்டிகளில் பங்குகொள்வார் என இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை மற்றும் பொட்ஸ்வானா வலைப்பந்தாட்ட சம்மேளனங்களின் பூரண ஒத்துழைப்புடன் பொட்ஸ்வானாவின் தேசிய வலைப்பந்தாட்ட அணி மற்றும் அந்நாட்டின் முன்னணி கழகங்களுடன் ஆறு போட்டிகளில் இலங்கை அணி அங்கு சென்று விளையாடி வருகின்றது.

இதில், பொட்ஸ்வானாவின் தேசிய வலைப்பந்தாட்ட அணியுடன் 3 போட்டிகளிலும், கழக மட்ட அணியுடன் 3 போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொட்ஸ்வானா சென்ற இலங்கை அணிக்கு சதுரங்கி ஜயசூரிய தலைவியாக செயற்படவுள்ளார்.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் ஆபிரிக்கா வலய நாடுகளின் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பொட்ஸ்வானா அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் 23ஆவது இடத்தில் உள்ளது. எனவே, உலக தரவரிசையில் 19ஆவது இடத்தில் உள்ள இலங்கை அணி, அந்த அணிக்கு பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் பயிற்சியாளராகக் கடமையாற்றிய திலகா ஜினதாச இலங்கை அணியின் பயிற்சியாளராக செயற்படுகின்றார். அத்துடன், இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவியான ட்ரிக்ஸி நாணயக்கார இலங்கை அணியின் முகாமையாளராகவும், உதவி முகாமையாளராக புஷ்பா எலுவாவும் செயற்படுகின்றனர்.  

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலியா, வட அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான தேசிய வலைப்பந்து அணிக்கு எப்படியான உதவிகள் கிடைக்கின்றது?

ஆசிய சம்பியன்களாக திகழும் இலங்கையின்…

இதற்கு முன் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர்களில் குறைந்தபட்சம் ஒரு வெற்றியைக்கூடப் பெற்றுக்கொள்ளாத இலங்கை அணி, இம்முறை நடப்பு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாக உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பங்குபற்றவுள்ளது.

இதேவேளை, 12 வீராங்கனைகள் உட்பட அதிகாரிகளுடன் பொட்ஸ்வானா சென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கான விமானப் பயணச்சீட்டுகளை வீடமைப்பு, நிர்மானத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச கடந்த 20ஆம் திகதி அமைச்சில் வைத்து வைபவ ரீதியாக கையளித்தார்.

முன்னதாக, கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியனாகத் தெரிவாகிய இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த அனைத்து வீராங்கனைகளுக்கும் வீடமைப்பு, நிர்மானத்துறை அமைச்சினால் மொறட்டுவைஅங்குலானையில் உள்ள தொடர் மாடி குடியிருப்பான்றில் தனித்தனி வீடுகள் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<