வோர்னரின் போராட்டம் வீண்; டெல்லிக்கு ஹெட்ரிக் தோல்வி

Indian Premier League 2023

212
Indian Premier League 2023

யஷஸ்வி ஜெய்ஷ்வால் – ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டம் மற்றும் ட்ரெண்ட் போல்ட் – யுஸ்வேந்திர சாஹலின் அபார பந்துவீச்சினால் டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்கு எதிராக இன்று (08) நடைபெற்ற IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

IPL தொடரில் இன்றைய 11ஆவது லீக் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஷ்வால் – ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். இதில் முதல் பந்திலிருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஷ்வால் 25 பந்துகளில் தனது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 60 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் இம்முறை IPL தொடரில் தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பதிவுசெய்தார்.

இதில் ஒரு சிக்ஸர், 11 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களை எடுத்த நிலையில் முகேஷ் குமாரின் பந்துவீச்சில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிம்ரன் ஹெட்மையர் 21 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பௌண்டரி என 39 ஓட்டங்களை எடுத்தார்.

இதன்மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைக் குவித்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ரோவ்மன் பவெல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டிரெண்ட் போல்ட வீசிய முதல் ஓவரில் பிரித்வி ஷா மற்றும் மனீஷ் பாண்டே இருவரும் ஓட்டங்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த ரிலி ரொஸோவ் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வோர்னர் – லலித் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் வோர்னர் தனது அரைச் சதத்தைப் பதிவுசெய்தார். அத்துடன், வோர்னர் 29 ஓட்டங்களை எடுத்தபோது, IPL தொடரில் குறைந்த போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

அதன்பின் அரைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லலித் யாதவ் 38 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய அக்சர் படேல், ரொவ்மன் பவெல், அபிஷேக் பரோல் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுடனும் நடையைக் கட்டினர்.

மறுமுனையில் தனிஒருவனாக போராடிய டேவிட் வோர்னரும் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் றோயல்ஸ் தரப்பில் டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கெபிடல்ஸை வீழ்த்தி இம்முறை IPL தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதேசமயம் டெல்லி கெபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக தங்களது மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<