அபார வெற்றியுடன் முதல் இடத்தை பிடித்த சென்னை சுபர் கிங்ஸ்!

IPL 2023

110

அஜின்கியா ரஹானே மற்றும் சிவம் டுபே ஆகியோரின் அதிரடியான ஓட்டக்குவிப்பின் உதவியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுபர் கிங்ஸ் அணி வேகமான ஓட்டங்களை குவித்தது.

இறுதிவரை போராடி பெங்களூர் அணியிடம் வீழ்ந்த ராஜஸ்தான்!

டெவோன் கொன்வே 40 பந்துகளில் 56 ஓட்டங்களையும், ருதுராஜ் கைக்வாட் 20 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்று வேகமான நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுத்தந்தனர். இவர்களில் ஆரம்பத்தின் பின்னர் அஜின்கியா ரஹானே மற்றும் சிவம் டுபே ஆகியோர் சிக்ஸர் மழை பொழியத்தொடங்கினர்.

அனுபவ வீரரான அஜின்கியா ரஹானே 24 பந்துகளில் அரைச்சதம் கடந்ததுடன் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களை குவித்தார். மறுமுனையில் வெறும் 20 பந்துகளில் அரைச்சதம் கடந்த சிவம் டுபே 21 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதியாக ரவீந்திர ஜடேஜா 8 பந்துகளில் 18 ஓட்டங்களை பெற, சென்னை சுபர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை குவித்தது.

இந்த ஓட்ட எண்ணிக்கையானது IPL வரலாற்றில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் குல்வான்ட் கெஜ்ரோலியா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. முதல் 2 ஓவர்களில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்தனர். அதுமாத்திரமின்றி முதல் 7 ஓவர்களில் 46 ஓட்டங்களை மாத்திரமே கொல்கத்தா அணி பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் ஓட்ட வேகம் குறைவாக இருந்தாலும், ஜேசன் ரோயின் வருகையின் பின்னர் ஓட்டவேகம் சடுதியாக அதிகரிக்க தொடங்கியது. அபாரமாக ஆடிய ஜேசன் ரோய் 19 பந்துகளில் அரைச்சதம் கடந்து மிரட்டியிருந்தார். இவர் 26 பந்துகளை எதிர்த்தாடி 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளுடன் 61 ஓட்டங்களை விளாசியிருந்த சந்தர்ப்பத்தில் மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

குறித்த இந்த ஆட்டமிழப்புக்கு பின்னர் ரிங்கு சிங் தனியாளாக ஓட்டங்களை குவித்து 33 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும் கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் துஷார் தேசபாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இறுதி பந்து ஓவர்களில் அற்புதமாக ஓட்டங்களை கட்டுப்படுத்திவரும் மதீஷ பதிரண 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை சாய்த்தார்.

சென்னை சுபர் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் அணியாக 10 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலித்தை பிடித்துக்கொண்டதுடன், கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<