12ஆவது ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்: பி.சி.சி.ஐ

244

இந்தாண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது.

மீண்டும் மும்பை அணியில் விளையாடவுள்ள லசித் மாலிங்க

இந்தியாவின் ஜெய்பூரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில், இலங்கை ……

உலக அளவில் இடம்பெறும் கிரிக்கெட் லீக் தொடர்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நாடாத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. அதிலும் குறித்த தொடர் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுமானால் அதற்கு மேலும் தனிச்சிறப்பு உண்டு.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரத்துடன் ஆரம்பமாகி வருடா வருடம் நடைபெற்றுவரும் இந்த போட்டித் தொடருக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றது.

இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் காலப்பகுதிகளில்  ஐ.சி.சி இன் சர்வதேச தொடர்கள் நடைபெறுவதும் மிக அரிதாகவே காணப்படுகின்றது. பணம் கோடி கோடிகளாக கொட்டப்படுகின்ற ஒரு விளையாட்டாகவும் இந்த ஐ.பி.எல் போட்டித் தொடர் அமைந்துள்ளது.

2008ஆம் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் கடந்த ஆண்டு வரை11 தடவைகள் நடைபெற்றுள்ளது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 3 தடவைகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 தடவைகளும், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெகான் சார்ஜஸ் மற்றும் சன் ரைஸஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும் சம்பியன் மகுடத்தை சூடியுள்ளன.

இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்ற காரணத்தினால் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஆவது ஐ.பி.எல் தொடர் முழுமையாக தென்னாபிரிக்காவிலும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றிருந்தன.

அதேபோன்று, இந்த வருடமும் அங்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதனால் 2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்பதில் சிக்கல்தன்மை தோன்றியிருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் நடைபெறவுள்ள 12ஆவது ஐ.பி.எல் போட்டிகள் எங்கு நடைபெறப்போகின்றது என்கின்ற தகவலை அறிய முழு கிரிக்கெட் இரசிகர்களும் ஆவலாக எதிர்பார்திருந்த நிலையில் இன்று (08) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி, இந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் என டெல்லி உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளை அள்ளிய வருண் சக்ரவர்த்தி

சர்வதேச கிரிக்கெட்டில் இரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் …..

இதன் மூலம் வெளிநாடுகளில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளன என்கின்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வழமையாக இரு அணிகள் மோதும் ஒரு போட்டியானது ஏதாவது ஒரு அணிக்கு சொந்தமான மைதானத்திலேயே நடைபெற்று வருகின்றது. உதாரணமாக கொல்கத்தா – சென்னை அணிகளுக்கிடையிலான குழுநிலை போட்டி என்றால் அது சென்னையிலோ அல்லது கொல்கத்தாவிலோ தான் நடைபெறும்.

ஆனால், இம்முறை நடைபெற்றவுள்ள போட்டிகள் ‘Caravan Format’ எனும் முறையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஐந்து அல்லது ஆறு நகரங்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. எனினும் குறித்த தகவல் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் இன்னும் சில நாட்களில் 12ஆவது தொடரின் முழுமையான போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்பதையும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.