பிரீமியர் லீக் சம்பியனாக முடிசூடிய மென்செஸ்டர் சிட்டி

303
Reuters

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மென்செஸ்ர் யுனைடெட் அணி ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற போட்டியில் கடைசி இடத்தில் இருக்கும் வெஸ்ட் பிரோம்விச் ஆல்பியன் கழகத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததை அடுத்து மென்செஸ்டர் சிட்டி அணி பிரீமியர் லீக் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.  

பட்டத்திற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள ஓல்ட் டிரபர்ட்டில் நடைபெற்ற போட்டியை மென்செஸ்டர் யுனைடெட் அணி சமநிலையில் முடித்திருந்தால் கூட போதுமாக இருந்தது. எனினும் ஜேய் ரொட்ரிகஸ் 73 ஆவது நிமிடத்தில் தலையால் ஹெடர் செய்து பெற்ற கோல் வெஸ்ட் பிரோம்விச் ஆல்பியன் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

இதன் மூலம் இரண்டாவது இடத்தில் இருக்கும் மென்செஸ்டர் யுனைடெட் அணி மென்செஸ்டர் சிட்டியை விடவும் 16 புள்ளிகள் பின்தங்கி உள்ளது. இன்னும் ஐந்து போட்டிகளே எஞ்சி இருக்கும் நிலையில் மென்செஸ்டர் சிட்டி கழகம் சம்பியனாவது உறுதியாகியுள்ளது.

மென்செஸ்டர் சிட்டி அணி கடந்த ஏழு பருவங்களில் பட்டம் வெல்வது இது மூன்றாவது முறை என்பதோடு ஸ்பெயின் முன்னாள் கால்பந்து வீரர் பெப் குவார்டியோவலாவின் முகாமையின் கீழ் சம்பியனாவது இது முதல் முறையாகும்.

எனினும் மென்செஸ்டர் சிட்டி கழகம் மொத்தம் 93 கோல்களை போட்டும் இரண்டு போட்டிகளில் மாத்திரம் தோற்றும் தொடரில் ஆதிக்கம் செலுத்தியது.

சம்பியன் லீக் அரையிறுதியில் ரியல் மெட்ரிட், பயேர்ன் பலப்பரீட்சை

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டிகளில் லிவர்பூல் அணி ரோமாவுடன் மோதவிருப்பதோடு …..

மறுபுறம் 2008 ஆம் ஆண்டு மென்செஸ்டர் சிட்டியின் உரிமையை ஷெய்க் மன்சூர் பின் செயித் அல் நஹ்யான் பெற்றது தொடக்கம் அந்த அணி எப்.ஏ. கிண்ணம், இரு லீக் கிண்ணம் மற்றும் எப்.ஏ. கம்யூனிட்டி ஷீல்ட் என ஏழு கிண்ணங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரீமியர் லீக் சம்பியனாகும் பயணத்தில் மென்செஸ்டர் சிட்டி அணி தொடர்ச்சியாக 18 போட்டிகளில் வெற்றி பெற்றதோடு இந்த பருவம் மற்றும் கடைசி பருவத்தில் ஏனைய அனைத்து அணிகளையும் தோற்கடித்துள்ளது. கடந்த ஜனவரியில் லிவர்பூலிடம் 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கும் வரை அந்த அணி ஒட்டுமொத்த லீக் பருவத்திலும் தோற்காத அணியாக இருந்து வந்தது.

இதில் எவெஸ்டன் அணியுடனான போட்டி மென்செஸ்டர் சிட்டி அணி பிரீமியர் லீக்கில் அதிகப்படியான புள்ளிகளான 82.13 புள்ளிகளை எட்டி சாதனை படைப்பதாக இருந்தது.

முன்னதாக ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி இருந்தால் பிரீமியர் லீக் வரலாற்றில் முன்கூட்டியே சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கலாம் என்ற நிலையில் மென்செஸ்டர் சிட்டி அணி அந்த போட்டியில் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்றது.  

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டிகளின் இரண்டு கட்ட காலிறுதி ஆட்டங்களிலும் லிவர்பூலிடம் மென்செஸ்ர் சிட்டி அணி தோல்வியை சந்தித்த நெருக்கடிக்கு மத்தியிலேயே அந்த அணி பிரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்புகளும் கைநழுவிக் கொண்டு போனது.

எனினும் கடந்த சனிக்கிழமை (14) நடைபெற்ற டோட்டன்ஹாம் (Tottenham) அணியுடனான போட்டியில் பெற்ற வெற்றி மென்செஸ்டர் சிட்டி அணி பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருங்கச் செய்தது. இதனைத் தொடர்ந்தே ஞாயிறு நடந்த போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தோல்வி மென்செஸ்டர் சிட்டி அணிக்கு பட்டத்தை வென்று கொடுத்தது.

இதன் மூலம் அதிக பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற அணிகள் வரிசையில் மென்செஸ்டர் சிட்டி அணி ஆர்சனலுடன் (03) மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டது. இந்த வரிசையில் மென்செஸ்டர் யுனைடெட் (13) முதலிடத்தில் இருப்பதோடு செல்சி (05) இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.  

மென்செஸ்டர் சிட்டி அணி தனது அடுத்த போட்டியில் சொந்த மைதானத்தில் ஸ்வான்சீ அணியை ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.   

இங்கிலாந்தின் உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டித் தொடர்களில் முதன்மையானதாக இருக்குத் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்பதோடு ஆண்டு தோறும் 380 போட்டிகள் நடைபெறுகின்றன.

இம்முறை பருவம் 2017, ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஆரம்பமானதோடு எதிர்வரும் மே 13ஆம் திகதி முடிவடையவுள்ளது.