உபாதைகளால் இலங்கையின் T20 உலகக் கிண்ண அணியில் மாற்றங்கள்??

697

விக்கெட்காப்பு அதிரடி துடுப்பாட்டவீரர் குசல் பெரேரா மற்றும் அதிரடி சகலதுறைவீரர் லஹிரு மதுசங்க ஆகியோர் உபாதைக்கு ஆளாகியதனை அடுத்து T20 உலகக் கிண்ணத்திற்காக அறிவிக்கபட்டிருக்கும் இலங்கை குழாத்தில் குறைந்தது ஒரு மாற்றமேனும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Video – மூன்றாவது T20I போட்டியின் தோல்விக்கான காரணம் என்ன?| தமிழ் Cricketry

T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ள இந்த இரண்டு வீரர்களும் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையில் நடைபெற்று முடிந்த T20 தொடரில் உபாதைக்குள்ளாகி இருந்தனர்.

இதில் குசல் பெரேரா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது T20 போட்டியில் தசை உபாதைக்கு உள்ளாகியிருந்ததோடு, லஹிரு மதுசங்க குறித்த போட்டியில் எலும்பு உபாதையினை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் குசல் பெரேரா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. T20 உலகக் கிண்ணத்தில் இலங்கையின் முதல் போட்டி ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நமீபியா அணியுடன் நடைபெறுகின்றது.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான குசல் ஜனித் பெரேரா, தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் இடையில் நடைபெற்றிருந்த ஒருநாள் தொடரில் பங்கேற்காது போயிருந்ததுடன், அதன் பின்னர் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற T20 தொடரில் முதல் போட்டி தவிர்ந்த ஏனைய இரண்டு போட்டிகளிலும் ஆடியிருந்தார். அதேநேரம், குறித்த T20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்காக 39 ஓட்டங்களை குவித்திருந்த அவர், கடைசி இரண்டு போட்டிகளிலும் மைதானத்திற்குள் களத்தடுப்பிற்கு வராமல் விட்டிருந்தமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.

புதிய T20 வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காட்டிய குயின்டன் டி கொக்

மறுமுனையில், தென்னாபிரிக்க வீரர்களுடனான T20 தொடரினை 3-0 என பறிகொடுத்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இம்மாத இறுதியில் ஓமானுக்கு பயணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஓமான் பயணமாகிய பின்னர், இலங்கை வீரர்கள் அங்கே ஓமான் அணியுடன் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவிருப்பதுடன், அதன் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் T20 உலகக் கிண்ணத்திற்கான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஆடுகின்றனர்.

இதேவேளை, உபாதைக்கு உள்ளான ஏனைய வீரரான லஹிரு மதுசங்க தன்னுடைய உபாதையில் மீள்வதற்கு இன்னும் 6 தொடக்கம் 8 வாரங்கள் தேவைப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒக்டோபர் 10ஆம் திகதி வரையில் உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் குழாத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத்தின் பின் பங்களாதேஷ் செல்லும் பாகிஸ்தான் அணி

லஹிரு மதுசங்க இலங்கை T20 உலகக் கிண்ண குழாத்தில் இருந்து வெளியேற்றப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணியில் உள்ளடக்கப்படாமல் போன விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் மினோத் பானுக்க, அவரின் இடத்தினை இலங்கை அணியில் பிரதியீடு செய்யக்கூடிய வீரராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் ஏனைய தகவல் ஒன்றின் அடிப்படையில் தசை உபாதைக்கு உள்ளான குசல் பெரேரா T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் பிரதியீடு செய்யப்படமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குசல் பெரேரா உடல் தேர்ச்சி அடையும் பட்சத்தில் அவர் இலங்கை அணி, T20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப்போட்டிகளில் இருந்து இலங்கை அணிக்கு விளையாடலாம் என நம்பப்படுகின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…