வீரர்கள் பெட்ரோல் போட்டு ஓடும் வாகனம் அல்ல: ரவி சாஸ்திரி

ICC T20 World Cup – 2021

89

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் பின்னடைவுக்கு தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடியதால் ஏற்பட்ட மனஅழுத்தம் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அதேபோல, உயிரியல் பாதுகாப்பு வலயத்துக்குள் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரரும், அவுஸ்திரேலிய ஜாம்பவானுமான டொன் பிராட்மேனை கொண்டு வந்தாலும் அவர் தாக்குப்பிடித்து விளையாயடுவது கஷ்டம் தான் என ரவி சாஸ்திரி குறிப்பிட்டார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடருடன் நிறைவுக்கு வந்தது.

கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வெற்றிகளைக் குவிக்க உதவியுள்ளார். குறிப்பாக அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணியை உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக உருவாக்கியதில் ரவி சாஸ்திரிக்கு முக்கிய பங்கு உண்டு.

எனவே, டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் மற்றும் T20i கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிகளைக் கொண்டாடினாலும் ரவி சாஸ்திரி, விராட் கோஹ்லி கூட்டணி ஐசிசியின் எந்தவொரு பட்டத்தையும் வெல்லவில்லை.

அதேபோல, இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுபர் 12 சுற்றோடு வெளியேறியது.

எவ்வாறாயினும், டுபாயில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற சுபர் 12 சுற்றின் கடைசி லீக் போட்டியில் நமீபியா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஆறுதல் வெற்றியோடு வெளியேறியது.

இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, போட்டியின் பிறகு காணொளி வாயிலாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அதில் இந்திய அணியுடனான பயணம் மற்றும் அனுபவங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

“இந்திய அணியினர் ஏறக்குறைய 6 மாதங்களாக உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருக்கிறார்கள். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் 3 வகை கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடியவர்கள். கடந்த 2 ஆண்டுகளில் வீரர்கள் அதிகபட்சமாக 25 நாட்கள் மட்டுமே குடும்பத்தினருடன் செலவிட்டுள்ளார்கள்.

நீங்கள் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. உங்கள் பெயர் பிராட்மேனாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கூட உயிரியல் பாதுகாப்பு வலயத்துக்குள் வந்தால், அவரின் துடுப்பாட்ட சராசரி குறையக்கூடும். ஏனென்றால், நீங்கள் உயிருள்ள மனிதர்.

உங்கள் பின்னால் பெட்ரோல் ஊற்றிவிட்டு, உங்களை இயக்குவதற்கு நீங்களும், வீரர்களும் வாகனங்கள் கிடையாது. அப்படி செயல்படவும் முடியாது. உயிரியல் பாதுகாப்பு வலயம் கடினமானது. இதை அனைத்தையும் கடந்துதான் இந்திய அணியினர் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். எந்தப் புகாரும் இப்போது இல்லை, ஆனால் மிக விரைவில் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும், கவனம் தேவை.

வீரர்களுக்கு ஓய்வு கொடுங்கள் என்று பிசிசிஐயிடம் கேட்பது என்னுடைய பணி அல்ல. ஐசிசியின் உலகக் கிண்ணம் போன்ற பெரிய போட்டித் தொடருக்கு முன், வீரர்களுக்கு ஓய்வு தேவை, இடைவெளி தேவை என்பது பிசிசிஐ நிர்வாகிகளுக்குத் தெரியுமே. அவ்வாறு இருந்தால், வீரர்கள் அனைவரும் மனரீதியாக உற்சாகமாக இருந்து விளையாடுவதற்கு தயாராக இருப்பார்கள். அனைத்து வீரர்களும் பேசுவதற்கு அணியில் உரிமை உண்டு, சிரேஷ்ட, கனிஷ்ட வீரர்கள் என்ற பாகுபாடு கிடையாது. என்னுடைய பயணத்தில் இது முக்கியமான மைல்கல்.

என்னுடைய பதவிக்காலத்தில் இந்திய அணி கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருந்தது. ஒவ்வொரு வீரரின் செயல்பாட்டையும் பார்த்தோம், உலகளவில் தோற்கடிக்காத அணிகள் இல்லை என்று நிலைக்கு வந்து சிறந்த அணியாக மிளிர்ந்தார்கள். நான் இந்திய அணி சிறந்தது எனச் சொல்லவில்லை, ஆனால், சிறந்த அணிகளுக்கான வரலாற்றில், சிறந்த அணி இந்தியா என்று கூறுகிறேன்.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்குச் சென்று எமது வீரர்கள் அச்சமில்லாமல் விளையாடினார்கள், தோற்கடித்தார்கள். நீண்ட காலத்துக்குப்பின் இங்கிலாந்து சென்று அந்நாட்டு அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை சிறந்த பயணம்” என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<