இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்

103
Rahul Dravid

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ராகுல் ட்ராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி T20I உலகக் கிண்ணத்துடன் நிறைவுக்கு வரும் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவியினை ராகுல் ட்ராவிட் T20I உலகக் கிண்ணம் நிறைவடைந்த பின்னர் அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பெற்றுக்கொள்ளவிருக்கின்றார்.

>> ஸ்கொட்லாந்திடம் போராடி வென்ற நியூசிலாந்து அணி

இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கும் ராகுல் ட்ராவிட் இந்திய கிரிக்கெட் அணியினை தனது ஆளுகைக்குள் முழுமையாக கொண்டு வந்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் முதல் கிரிக்கெட் சுற்றுத்தொடராக நியூசிலாந்து அணியுடனான போட்டிகள் அமைகின்றன. இந்தியாவின் சொந்த மண்ணில் இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த கிரிக்கெட் சுற்றுத்தொடரில் மூன்று T20 போட்டிகளும், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அடங்குகின்றன.

இந்தியாவிற்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் போது மிகச் சிறந்த துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக இருந்த ராகுல் ட்ராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக செயற்பட்டது தவிர, கடந்த 2016ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணங்களில் இந்திய U19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் செயற்பட்டிருக்கின்றார். இந்த இளையோர் உலகக் கிண்ணங்களில் இந்தியா 2016ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றிருந்ததுடன், 2018ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் பெற்றிருந்தது.  அதேநேரம், ராகுல் ட்ராவிட் இந்திய A கிரிக்கெட் அணிக்கும் பயிற்சிகளை வழங்கிய அனுபவம் கொண்டிருக்கின்றார்.

>> ஆறுதல் வெற்றிக்காக மே.தீவுகளுடன் மோதும் இலங்கை!

தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மாறியது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ட்ராவிட் அதற்காக பெருமை கொள்வதாக தெரிவித்திருந்ததோடு, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியினால் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்ட இந்த அணியினை தொடர்ந்தும் சிறப்பாக கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

இதேநேரம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் மாறியமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரான சௌரவ் கங்குலி, கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட சிறந்தவீரர்களில் ஒருவரான ராகுல் ட்ராவிட்டினை பயிற்சியாளராக வரவேற்பதாக தெரிவித்திருக்கின்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<