உலகக் கிண்ண குழாத்திலிருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்

86

இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக, உலகக் கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம்

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை நிரூபிக்கப்பட்டமையை தொடர்ந்து அவருக்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலெக்ஸ் ஹேல்ஸிற்கு எதிரான நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் எஷ்லி கிலெஸ் மற்றும் தேர்வுக்குழு தலைவர் எட் ஸ்மித் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்”

“அணி வீரர்கள் சிறந்த முறையில் விளையாடி வருகின்றனர். இவ்வாறான தருணத்தில் வீரர்களுக்கான சிறந்த சூழாழை உருவாக்குவதிலும், அவர்களுக்கு கவனச் சிதறல்களை ஏற்படுத்தாமல் இருப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அலெக்ஸ் ஹேல்ஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள (03) அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டி கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மட்டுப்படுத்த ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் ஆகியவற்றிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அலெக்ஸ் ஹெல்ஸ் தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் எஷ்லி கிலெஸ் குறிப்பிடுகையில், “மிக நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டது. வீரர்களுக்கான சிறந்த சூழ்நிலையையும் உருவாக்குவதற்கு நாம் எத்தணித்து வருகின்றோம். வீரர்கள் எவ்வித கவனச்சிதறல்களும் இன்றி மைதானத்தில் விளையாட வேண்டும் என்பதை நாம் எதிர்பார்க்கிறோம்.

பெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்

“நான் முக்கியமாக ஒன்றை செல்லிக்கொள்ள வேண்டும், அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணியிலிருந்து முற்றாக வெளியேற்றப்படவில்லை. அவருக்கான வாய்ப்பு இங்கிலாந்து கிரிக்கெட்டில் எதிர்காலத்திலும் கிடைக்கும். அவர் தொடர்ந்தும் தொழில்முறை கிரிக்கெட் வீரராக செயற்படுவதற்கான உதவிகளை அவரது கௌண்டி கழகமான நோட்டிங்கஹம்ஷையர் செய்யவேண்டும் என்பதை நாம் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.

இங்கிலாந்து ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கு ஒவ்வொரு பருவகாலமும் மேற்கொள்ளப்படும் ஊக்கமருந்து பரிசோதனையில், அலெக்ஸ் ஹேல்ஸ் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்ந நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இங்கிலாந்த கிரிக்கெட் சபை இந்த முடிவை அறிவித்துள்ளதுடன், பதில் வீரர் ஒருவரை விரைவில் அறிவிக்கவுள்ளது.

இதேவேளை, உலகக் கிண்ணத்துக்கான குழாம் அறிவிக்கப்பட்டிருந்த சில நாட்களில் அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருந்தார்.  அலெக்ஸ் ஹேல்ஸ், தன்னுடைய கௌண்டி கழகமான நோட்டிங்கஹம்ஷையர் அணியிலிருந்தும் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க