ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை நிறைவு செய்த இலங்கை

340

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு எதிராக 3 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

இப்போட்டியின் வெற்றி மூலம் 2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்திய அணிக்கு எதிராக முதல் ஒருநாள் வெற்றியினைப் பதிவு செய்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆறுதல் வெற்றியொன்றினைப் பதிவு செய்திருக்கின்றது. 

எனினும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இந்திய கிரிக்கெட் அணி 2-1 என தமதாக்கிக் கொள்கின்றது.

ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கில் வருகின்ற மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரினை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் வெள்ளிக்கிழமை (23)  ஆரம்பாகியது.

Video – இரண்டாவது போட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் யாருடையது?

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின்  தலைவரான ஷிக்கர் தவான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றார்.

இலங்கை அணி, இந்த ஒருநாள் தொடரினை ஏற்கனவே இழந்ததன் காரணமாக தொடரில் ஆறுதல் வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் இப்போட்டியில் மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி, இலங்கை அணியில் கசுன் ராஜித, லக்ஷான் சந்தகன் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோருக்குப் பதிலாக அகில தனன்ஞய, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மறுமுனையில் இந்திய அணி 5 அறிமுக வீரர்களுடன், தமது கடைசிப் போட்டிக்கான அணிக்குழாத்தில் ஆறு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

இலங்கை – அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக்க, பானுக்க ராஜபக்ஷ, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), ரமேஷ் மெண்டிஸ், சாமிக கருணாரட்ன, அகில தனன்ஞய, துஷ்மந்த சமீர, பிரவீன் ஜயவிக்ரம

இந்தியா – சிக்கர் தவான் (தலைவர்), பிரித்வி சோவ், சன்ஜு சம்சன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ரானா, ராகுல் சாஹர், சேட்டன் சக்கரியா, நவ்தீப் சைனி, கிருஷ்ணப்பா கௌதம்

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, அதிரடியான முறையில் ஓட்டங்களை குவித்த போதும் இலங்கை சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிப்பதிலும் தடுமாற்றம் காட்டியது.

இலங்கை அணியில் இணையும் புதுமுக சுழல் பந்துவீச்சாளர்

அதன்படி, இறுதியில் இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 43.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இந்திய அணி 225 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் பிரித்வி சோவ் 8 பௌண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளுக்கு 49 ஓட்டங்களைப் பெற்று தனது தரப்பிற்காக வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்ய, சன்ஜு சம்சன் 46 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் இந்திய அணிக்கு நெருக்கடி உருவாக்கிய சுழல் பந்துவீச்சாளர்களான பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அகில தனன்ஞய ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்ற, துஷ்மன்த சமீர 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். 

இந்திய அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸின் போது மழையின் குறுக்கீடு காணப்பட்ட காரணத்தினால், போட்டி அணிக்கு 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதோடு இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக டக்வெத் லூயிஸ் முறையில் 227 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

அதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு தமது பதில் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு பானுக்க ராஜபக்ஷ மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி உதவினர். 

அதன்படி, இரண்டு வீரர்களும் அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 109 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை நெருங்கிய போதிலும், சில தொடர்ச்சியான விக்கெட்டுக்கள் இலங்கை அணிக்கு தடுமாற்றம் ஒன்றினை உருவாக்கியது. எனினும் கடைசியில் பொறுமையாக ஆடிய இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை 39 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களுடன் அடைந்தது. 

கொவிட்-19 வைரஸினால் தடைப்பட்ட மேற்கிந்திய தீவுகள் – ஆஸி. ஒருநாள் போட்டி

இலங்கை அணி வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவியாக இருந்த அவிஷ்க பெர்னாண்டோ தன்னுடைய 5ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 98 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 76 ஓட்டங்கள் பெற்றதோடு, பானுக்க ராஜபக்ஷ தன்னுடைய கன்னி ஒருநாள் அரைச்சதத்துடன் 56 பந்துகளில் 12 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ராகுல் சஹார் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், சேட்டன் சக்கரியா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் இலங்கை அணிக்கு அழுத்தம் உருவாக்கிய போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க பெர்னாண்டோ தெரிவாக, தொடர் நாயகனாக இந்திய கிரிக்கெட் அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவாகினார்.   

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 225 (43.1) பிரித்வி சோவ் 49(49), சன்ஜு சம்சன் 46(46), சூர்யகுமார் யாதவ் 40(37), அகில தனன்ஞய 44/3(10), பிரவீன் ஜயவிக்ரம 59/3(10), துஷ்மன்த சமீர 55/2 (8.1) 

இலங்கை – 227/7 (39) அவிஷ்க பெர்னாண்டோ  76(98), பானுக்க ராஜபக்ஷ 65(56), ராகுல் சஹார் 54/3(10), சேட்டன் சக்கர்யா 34/2(8) 

முடிவு – இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<